மணவிலக்கு வழக்கில் அம்பலமான ‘99-டூ-1’ மோசடி

மணவிலக்கு வழக்கில் அம்பலமான ‘99-டூ-1’ மோசடி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 May 2026 - 7:14 pm

2 mins read

மகளாகக் கருதும் ஒருவரைத் தமது சார்பில் 3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான வீட்டை வாங்கச் சொல்லி, ‘99-டூ-1’ (99-to-1) திட்டத்தின் வழியாக, வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரியை முழுமையாகச்(ABSD) செலுத்துவதைத் தவிர்த்தார் 54 வயது மாது ஒருவர்.

2022 நவம்பர் மாதத்தில் அவர் இவ்வாறு செய்தார். கணவரிடம் மணவிலக்குக் கோருவதற்குக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு அவர் இச்செயலில் ஈடுபட்டார். அந்த மாதும் அவரது கணவரும் கூட்டு உரிமையாளர்களாக இருந்த வீட்டின் மதிப்பும் கிட்டத்தட்ட 3 மில்லியன் வெள்ளியாகும்.

இரண்டாவது வீட்டை வாங்குவதற்காக, கிட்டத்தட்ட 500,000 வெள்ளி பெறுமானமுள்ள முத்திரை வரியைத் தவிர்க்க விற்பனை இயக்குநரான அவர் ஏன் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மணவிலக்கின்போது கணவருடன் வசித்த இல்லத்திலுள்ள தமது பங்கு விற்கப்படும்வரை அவர் காத்திருந்திருக்கலாம் என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

மகளைப்போலத் தாம் கருதிய பெண்ணின் பெயரில் வீடு வாங்கிய அந்த மாது, அதற்கான முழுத் தொகையையும் தாமே செலுத்தினார். தமது தந்தையிடமிருந்தும் வங்கியிடமிருந்தும் அவர் இதற்காகக் கடன் பெற்றிருந்தார்.

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) இத்தகைய பரிவர்த்தனைகளை ‘ஏமாற்றும் நோக்கிலான ஏற்பாடுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ஏமாற்றுமுறையான ‘99-டூ-1’ திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் முழுமையான முத்திரை வரியுடன் 50 விழுக்காடு கூடுதல் அபராதத்தையும் செலுத்த வேண்டியிருக்கும்.

அந்த மாதின் மணவிலக்கு விசாரணையின்போது, அவரது இந்தச் செயல், உயர் நீதிமன்ற நீதிபதி டே ஹுவீ ஹுவீயின் கவனத்திற்கு வந்தது. இது குறித்துத் தகுந்த அதிகாரிகளிடம் மதிப்பீட்டிற்காக அணுகப்பட்டதா என்றும் சொத்து வாங்கியதற்கான முத்திரை வரித் தொகை முழுமையாகச் செலுத்தப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அந்த மாதின் வழக்கறிஞர், “அத்தகைய மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டது,” என்று கூறினார். நிலுவையில் இருந்த முத்திரை வரித் தொகையையும் அபராதத்தையும் செலுத்துமாறு அந்த மாதுக்கு உத்தரவிடப்பட்டதா என்பது நீதிமன்றத் தீர்ப்பில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

இந்த மாதின் வழக்கில் அத்தொகை கிட்டத்தட்ட 800,000 வெள்ளியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்