தேசிய பூங்காக் கழகம், கைவிடப்பட்ட சில பூனைகளை பிடோக் ரெசர்வோர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலிருந்து அகற்றியுள்ளது.
புளோக் 147 பிடோக் ரெசர்வோர் சாலையில், காயமுற்ற பூனைகளை அல்லது அவற்றின் உடல்களைக் கண்டறிந்த குடியிருப்பாளர்கள், அவை உயரத்திலிருந்து விழுந்ததாகச் சந்தேகித்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டனர்.
பூனைகள் அடுத்தடுத்து இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பாளர்கள், அவை ஒரே வீட்டிலிருந்து விழுந்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.
Sayang Our Singapore’s Community Cats ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 19) பதிவிட்ட ரெய்ன் டெங், 42, எனும் பயனர், டிசம்பர் 16ஆம் தேதி காலை பூனை ஒன்று இறந்து கிடந்ததையும் அதே தினம் மாலை வேறொரு பூனை காயமுற்று இருந்ததையும் குடியிருப்பாளர் ஒருவர் கண்டறிந்ததாகக் கூறினார்.
இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேசிய பூங்காக் கழகம், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட பூனைகள் நிராகரிக்கப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து பூனைகளை தான் அகற்றியதாகக் கூறியது.
இச்சம்பவம் குறித்து கழகம் விசாரணை நடத்தி வருகிறது.

