சிங்கப்பூர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் அதன் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் ‘முடியாது’ என்று சொல்லும் ஆற்றலைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியுறவு அமைச்சின் ஒதுக்கீட்டு விவாதத்தின்போது உரையாற்றிய அவர், நாட்டை வழிநடத்தும் நான்கு முக்கிய முன்னுரிமைகளை முன்வைத்தார்.
முதலாவது, நாட்டின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை ஆகியவற்றைப் பாதுகாப்பது. இரண்டாவது, அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதையும் கடல்வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்தையும் உறுதிசெய்வது. மூன்றாவது, உலகளாவிய பொருளியல் நடுவமாகச் சிங்கப்பூரின் பங்கை வலுப்படுத்துவது. இறுதியாக, உலகளாவிய சவால்களைச் சமாளிக்க, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பு அணுகுமுறைக்கு ஆதரவளிப்பது.
சிங்கப்பூர் இந்தக் குறிப்பிட்ட முன்னுரிமைகளின் காரணமாக, அதிகரித்துவரும் உத்திபூர்வ நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று அமைச்சர் எச்சரித்தார். வல்லரசுகள், நமது அண்டை நாடுகள் அல்லது பிற முக்கிய நாடுகளுடன் நமது நலன்கள் எப்போதும் ஒத்துப்போகாது என்று அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய கொந்தளிப்பான சூழலில், ‘முடியாது’ என்று சொல்லும் ஆற்றலைச் சிங்கப்பூர் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என்று டாக்டர் விவியன் கூறினார்.
சில விவகாரங்களில் சிங்கப்பூர், பங்காளித்துவ நாடுகளுடன் பணிவான முறையில் கருத்து வேறுபாடு கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார். இது ஒரு தரப்பைத் தெரிவுசெய்வது பற்றியது அன்று, மாறாக நாட்டின் நீண்டகால தேசிய நலன்களைப் பாதுகாப்பது தொடர்பானது என்றார் அமைச்சர் விவியன்.
இத்தகைய சுதந்திரமான நிலையை எடுப்பதால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதையும் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான வெளிப்புற நெருக்குதல்கள் வரக்கூடும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதனால், உறுதியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
“இந்தத் திறனை நாம் எப்போதாவது இழந்தால், நமது முக்கியத்துவத்தையும் சுதந்திரத்தையும் இழந்துவிடுவோம்,” என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதை விளக்கும் வகையில், அனைத்துலகச் சட்ட மீறல்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவரும் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை அமைச்சர் எடுத்துரைத்தார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குக் கண்டனம் தெரிவித்ததும் உலகளாவிய வர்த்தக விதிகளை மீறும் அமெரிக்காவின் வரிகள் குறித்து ஏமாற்றம் தெரிவித்ததும் இதில் அடங்கும். மத்திய கிழக்கு விவகாரத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் 7ஆம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்த அதே வேளையில், இஸ்ரேலின் ராணுவ பதிலடி நடவடிக்கைகள் அனைத்துலக மனிதநேயச் சட்டத்தை மீறியுள்ளன என்பதையும் உறுதியாகச் சுட்டிக்காட்டியதை அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தனது கொள்கைகளை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், வெளியுறவுக் கொள்கையானது நியாயம், சமத்துவம் போன்ற கொள்கைகளின் அடிப்படையிலும் அதே வேளையில் நடைமுறை அடிப்படையிலும் அமைந்திருக்க வேண்டும் என்றார்.
பல ஆண்டுகளுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 6 விழுக்காடு வரை தற்காப்புக்காக முதலீடு செய்யப்படுவதன் மூலம் இந்த அணுகுமுறை எவ்வாறு ஆதரிக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அமெரிக்கா, சீனா இடையே நிலவும் போட்டி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்த அக்கறைகளுக்குப் பதிலளித்த அவர், சிங்கப்பூர் எந்தவொரு தரப்பையும் தெரிவுசெய்ய விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். மாறாக, நலன்கள் ஒத்துப்போகும் இடங்களில் இரு நாடுகளுடனும் ஒத்துழைப்பதற்கான ஆக்கபூர்வமான வழிகளைச் சிங்கப்பூர் கண்டறியும் என்றார் டாக்டர் விவியன்.
அதிக நிலைத்தன்மைக்காக நடுத்தர, வல்லரசு நாடுகளுடனான பரந்த பங்காளித்துவ உறவை வலுப்படுத்தவும் வெளியுறவு அமைச்சு பணியாற்றும். பங்காளித்துவங்களை மேம்படுத்துவது, அதிக தூதரகங்களைத் திறப்பது போன்றவற்றின் மூலம் இது சாத்தியமாகும்.
அத்துடன், ஆசியான் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு வட்டார ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும் பணிகளும் தொடரும் என்றார் அமைச்சர். ஆசியான் அமைப்பு தொடர்ந்து சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கையின் ஆணிவேராகத் திகழ்கிறது என்று கூறிய டாக்டர் விவியன், 2027ல் ஆசியான் தலைமைத்துவத்தைச் சிங்கப்பூர் ஏற்கவுள்ளதைக் குறிப்பிட்டார்.
“இது ஒரு பெரிய பொறுப்பு, அதே நேரம் ஒரு வாய்ப்பும்கூட. ஆழமான ஒருங்கிணைப்பைத் தொடரவும் வெளித் தரப்புப் பங்காளித்துவங்களை ஊக்குவிக்கவும் எங்கள் தலைமைத்துவத்தை நாங்கள் பயன்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.
ஆசியான் வட்டாரத்தை வர்த்தகத்திற்குத் திறந்ததாகவும் அதே வேளையில் அமைதி, நிலைத்தன்மை, ஒத்துழைப்புக்குக் கடப்பாடு கொண்டதாகவும் வைத்திருக்க அமைச்சு பணியாற்றும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுதந்திரமான பாதையை வகுக்க வலுவான உள்நாட்டு ஒற்றுமை அவசியம் என்றார் அவர். வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்கொள்ளவும் சிங்கப்பூரை யாராலும் விலைக்கு வாங்கவோ மிரட்டவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தவும் ஒன்றுபட்ட சமூகம் அவசியம் என்பதையும் அமைச்சர் விவியன் மன்றத்தில் நினைவூட்டினார்.

