மனிதவள அமைச்சு, மார்ச் மாதம் முதல் ஜூன் வரை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டுப் பணியிடங்கள் வெப்பப் பாதுகாப்பு தொடர்பான விதிகளை மீறியதைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்துள்ளது.
ஆண்டின் ஆக வெப்பமான இந்த நான்கு மாதங்களில் 250 பணியிடங்களில் அமைச்சு இவ்வாறு சோதனை நடத்தியது.
78 பணியிடங்களில் ஊழியர்களுக்குக் கடுமையான உடலுழைப்பின்போது நிழலில் ஓய்வெடுப்பதற்கான இடைவேளை போதிய அளவில் வழங்காதது, வெப்பத்துக்கு உடலைப் பழக்குவதற்கான பயிற்சித் திட்டங்களில் ஊழியர்களை ஈடுபடுத்தாதது உட்பட பல்வேறு விதிமீறல்கள் தெரியவந்ததாக அமைச்சு கூறியது.
கட்டுமானத் தளங்கள், கப்பல் பழுதுபார்ப்பு இடங்கள், நிலவனப்புப் பணியிடங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.
ஜூலை மாத மத்தியில் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சு இதைத் தெரிவித்தது.
விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அபராதம் விதித்தல், விதிமீறல் குறித்த எச்சரிக்கை வழங்குதல் போன்ற அமலாக்க நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டது. அவற்றையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேவையான வெப்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அமைச்சு சொன்னது.
வெளிப்புற ஊழியர்களுக்கு வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு, அமைச்சு முதல்முறையாக இத்தகைய சோதனையை நடத்தியுள்ளது.
புதிய நடைமுறைகளின்கீழ், வெளிப்புறங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் மிதமான அல்லது அதிக வெப்பம் நிலவும் வேளைகளில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சிறிது நேரம் ஓய்வெடுக்க இடைவேளை வழங்கப்பட வேண்டியது அவசியம்.
தொடர்புடைய செய்திகள்
காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை, காற்றின் வேகம், சூரியக் கதிரியக்க அளவு ஆகியவை மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் ‘வெட் பல்ப் குளோப்’ வெப்பநிலைக்கு (டபிள்யுபிஜிடி) ஏற்ப ஒரு நாளில் நிலவும் வெப்பம் மிதமானதா அல்லது அதிகமானதா என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, டபிள்யூபிஜிடி 33 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குமேல் இருந்தால் அது அதிக வெப்பம் நிலவும் நாளாகக் கருதப்படும். அத்தகைய நாள்களில் வெளிப்புறங்களில் கடுமையான உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளில் ஈடுபடுவோர் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.
சிங்கப்பூரின் வெப்பத்துக்கும் இங்குள்ள காற்றின் ஈரப்பத நிலைக்கும் உடலைப் பழக்கப்படுத்தும் திட்டத்தின்கீழ், வெளிப்புறத்தில் வேலை செய்யும் நேரத்தையும் வேலையின் அளவையும் குறைந்தது ஏழு நாள்களுக்குப் படிப்படியாக உயர்த்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஓர் ஊழியர் முதல் இரண்டு நாள்களில் வெளிப்புறத்தில் இரண்டு மணி நேரம் வேலை செய்யலாம். அது அந்த நாளில் அதிக வெப்பம் நிலவும் நேரமாக இருக்கக்கூடாது. அன்றைய எஞ்சிய நேரத்திற்கு அவர் உட்புற வேலைகளில் ஈடுபடலாம். குறிப்பாக, சிங்கப்பூரைவிட வெப்பநிலை குறைந்த நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நீண்டகால நோயிலிருந்து அண்மையில் குணமான ஊழியர்களுக்கும் இது அவசியம்.