வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர் இல்லை எனத் தேர்தல் துறை அதிகாரிகளிடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 200 சிங்கப்பூரர்கள் புகாரளித்துள்ளனர்.
இதனால் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தங்களால் வாக்களிக்க முடியாது எனப் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்கள் வாக்களித்தபோதும், தற்போது வெளியான வாக்காளர் பதிவேட்டில் அவர்கள் பெயர் இல்லை எனத் தேர்தல் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
முதற்கட்டச் சோதனைகளின்படி, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களில் இருந்த மின்னணுப் பதிவுக் கருவியால் அவர்களின் அடையாள அட்டைகள் சரியாகப் பதிவுசெய்யப்படாமல் போயிருக்கலாம் என அத்துறை விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டது.
இதனால், வாக்காளர் வருகைப்பதிவுத் தகவல் முறையாகப் பதிவுசெய்யப்படாமல் போயிருக்கலாம் என அத்துறை மேலும் கூறியது.
தற்போது நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் உணர்திறன்மிக்க மின்னணுப் பதிவுக் கருவிகள் பயன்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்தது.
வாக்கு அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள், செப்டம்பர் முதல் நாள் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும் தேர்தலுக்குப் பின், புகார் அளித்த சிங்கப்பூரர்களை அணுகி, தகவல்களைச் சரிபார்த்தபின் அவர்களது பெயர் மீண்டும் வாக்காளர் பதிவேட்டில் சேர்க்கப்படும் எனவும் அத்துறை கூறியது.
பதிவேட்டில் பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வாக்காளர்களுக்கு ஏற்கெனவே அவகாசம் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் தேர்தல் ஆணை வெளியான பிறகு பதிவேட்டில் பெயர்களைச் சேர்க்க முடியாது என்றும் அது குறிப்பிட்டது.