தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைவிடப்பட்ட நிலையில் ஒரே வீட்டுக்குள் 30 பூனைகள்; துர்நாற்றம் வீசுவதாகப் புகார்

2 mins read
2395be0c-4def-4061-9e03-64ef894b6427
பிறந்து சில மாதங்களே ஆன பூனைக்குட்டிகளும் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்துள்ளது. - படம்: மதர்ஷிப்

சுவா சூ காங்கில் உள்ள வீவக வீடு ஒன்றில் ஏறத்தாழ 30 பூனைகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக அக்கம்பக்கத்தார் தெரிவித்து உள்ளனர்.

தெக் வாய் லேன் புளோக் 16ன் இரண்டாவது தளத்தில் உள்ள அந்த வீட்டில் அண்மைய சில நாள்களாக பூனைகளைத் தவிர வேறு எவரையும் காணமுடியவில்லை என்று தெரிய வந்து உள்ளது.

அந்த வீட்டில் 30க்கும் மேற்பட்ட பூனைகள் இருப்பதாகவும் அவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் வாங் என்னும் அண்டைவீட்டார் ஷின் மின் நாளிதழிடம் கூறினார்.

பூனைகளின் கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. அதனால், மேல்தளம், கீழ்த்தளம் என எல்லாப் பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது,” என்றார் அவர்.

ஜனவரி 9, 10 ஆகிய இரு நாள்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது ஆட்கள் எவரையும் கண்டதில்லை என்று ஷின் மின் செய்தியாளர் தெரிவித்து உள்ளார்.

வீட்டின் கதவு திறந்திருந்ததாகவும் பிறந்த சில மாதங்களே ஆன பூனைக்குட்டிகளும் அங்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

முப்பதுகளில் உள்ள ஒரு தம்பதியர் அந்த வீட்டில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் அந்த வீட்டில் இருப்பதாக மற்றொரு அண்டை வீட்டார் ஷின் மின்னிடம் கூறினார்.

அந்த இருவரில் ஒரு பெண் மட்டும் சில சமயங்களில் அங்கு வந்து பூனைகளுக்கு சாப்பாடு தருவார் என்றார் அவர்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்கு விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தின் (SPCA) சோதனை அதிகாரிகள் ஜனவரி 9, 10 தேதிகளில் சென்று பார்த்தபோது விளக்குகளும் மின்விசிறிகளும் இயங்கிக் கொண்டு இருந்ததாக சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி சங்கர் கூறினார்.

பூனைகளின் நல்வாழ்வைக் கருதி வீட்டு உரிமையாளர்ககளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் தமது சங்கம் பரிந்துரைத்து இருப்பதாக அவர் தெரிவித்ததாக ‘மதர்ஷிப்’ இணையச் செய்தி கூறியது.

குறிப்புச் சொற்கள்