தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருள்களைக் குவித்து வைக்கும் பழக்கத்திற்குக் தீர்வுகாண புதிய குழு

2 mins read
fc0024aa-1684-4fe2-b97b-a34f6051d134
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் குவித்து வைக்கப்பட்ட பொருள்களை ஜனவரி 5ஆம் தேதி தொண்டூழியர்கள் அப்புறப்படுத்தி உதவினர். - தேசிய வளர்ச்சி அமைச்சு

தேவையில்லாத பொருள்களை வீட்டுக்குள் கொண்டுவந்து குப்பைபோலச் சேமித்து வைக்கும் பழக்கம் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் அதனைச் சமாளிக்க புதிய குழு ஒன்று சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த ‘புதிய சுற்றுச்சூழல் நடவடிக்கைக் குழு’வில் (Neat), பல்வேறு அரசாங்க அமைப்புகள், சமூகக் குழுக்கள் மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 28 பேர் இடம்பெற்று உள்ளனர்.

தேவையற்ற பொருள்கள் மலைபோலக் குவித்து வைக்கப்படும் சம்பவங்களை எளிதில் கண்டறிந்து தீர்வுகாண அந்தக் குழு நிறுவப்பட்டு உள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தெரிவித்து உள்ளன.

பொதுநல ஆலோசகர்கள், மனநல நிபுணர்கள், முதியோர் பராமரிப்புச் சேவை நிபுணர்கள் ஆகியோருடன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அந்தக் குழுவில் இணைந்துள்ளது.

மேலும், வீடுகளைச் சுத்தம் செய்து புதுப்பித்துத் தரக்கூடிய கழிவு நிர்வாகச் சங்கங்களுடன் குத்தகையாளர் ஒருவரும் அந்தக் குழுவில் இருப்பார்.

தற்போதைய நிலவரப்படி, தேவையற்ற பொருள்களைக் குவித்து வைத்திருக்கும் 627 கடுமையான சம்பவங்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பின்கீழ் வந்துள்ளன.

அவற்றில் 357 சம்பவங்கள் சிக்கலானவை, தீர்க்க இயலாதவை. அந்தப் பொருள்களைச் சேர்த்து வைத்தவர்கள் அவற்றுக்குத் தீர்வுகாண ஒத்துழைக்காதது அதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் மலைபோலக் குவித்து வைத்திருக்கும் பழைய, வீணான பொருள்களைப் பார்வையிட அதிகாரிகளுக்கு அனுமதி தருவதில்லை.

இருப்பினும், 270 சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டது. வீண்பொருள் குவிப்பு நிர்வாக அடிப்படைக் குழு (HMCG) அதற்கான முயற்சிகளில் கைகொடுத்தது. பொது சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் ஏற்படும் அச்சுறுத்தலின் அடிப்படையில் பொருள் குவிப்புச் சம்பவங்களை அந்த அமைப்புப் பிரித்து வகைப்படுத்துகிறது.

மனநலன் நிலவரங்கள், சமூகத் தனிமை, மன அதிர்ச்சி அல்லது ஆழ்ந்த துயரம் போன்றவற்றின் அறிகுறிகளாக, பொருள்களைப் பதுக்கி அல்லது குவித்து வைக்கும் பழக்கம் இருக்கலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தெரிவித்து உள்ளன.

மக்கள்தொகை மூப்படைவது இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கக்கூடும் எனவும் அந்த அமைச்சுகள் கூறியுள்ளன.

குறிப்புச் சொற்கள்
குப்பைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுதேசிய வளர்ச்சி அமைச்சு