தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைமறைவான ஆடவர்; பிணை கையெழுத்திட்ட இருவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
ccea153f-2a40-48a3-8e15-881180e65c43
பிணை விதிமுறைகளை மீறிய லோங் சிஹுவாவுக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

வீடு புகுந்து கொள்ளையடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டதும் தலைமறைவானார்.

பிணை கையெழுத்திட்ட இருவர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) குற்றம் சுமத்தப்பட்டது.

வீடு புகுந்து கொள்ளையடித்ததாகவும் திருடிய பொருள்களை வைத்திருந்ததாகவும் சீனாவைச் சேர்ந்த 39 வயது லோங் சிஹுவா மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிணையில் வெளிவந்ததும் அவர் தலைமறைவானார்.

அவர் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று வின்சோர் பார்க்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டிலிருந்து $570,000க்கும் அதிக பெறுமானமுள்ள நகைகளை அவர் கொள்ளையடித்ததாக நம்பப்படுகிறது. அவருக்கு உடந்தையாக ஒருவர் செயல்பட்டதாகவும் அறியப்படுகிறது.

இதற்கிடையே, விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக 41 வயது வில்சன் ஆங், 25 வயது வாய் கெய் ஃபுங் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கும் லோங்கைத் தண்டனையிலிருந்து பாதுகாக்க உறுதி அளித்த குற்றத்தைப் புரிந்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்ததாகவும் சிங்கப்பூரரான ஆங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் பணத்துக்காகப் பிணை கையெழுத்திட்டதாக அறியப்படுகிறது. லோங்கை அவருக்கு அதற்கு முன் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டது.

பிணைக்குத் தேவையான பணத்தை மலேசியரான வாய், ரொக்கமாக ஆங்கிடம் அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.

லோங்கை விசாரணைக் காவலிலிருந்து விடுவிக்க $30,000 வழங்கி பிணை கையெழுத்திட்டார் ஆங்.

பிணையில் வெளிவந்த லோங்கை வாய் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். லோங் அங்கு தங்குவதற்கான செலவுகளை வாய் ஏற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.

லோங்குடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததாகவும் திடீரென்று அவருடன் தொடர்புகொள்ள முடியாமல் போனதாகவும் காவல்துறையிடம் ஆங் புகார் செய்தார்.

தலைமறைவான லோங் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை.

பிணை விதிமுறைகளை மீறிய அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆங்கிற்கு $15,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.

வாய்க்குப் பிணை வழங்கப்படவில்லை.

இவர்கள் தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்