மகளையும் பேரப்பிள்ளைகளையும் காண தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருக்கும் திருவாட்டி சண்முகம் நீலா, 66, மகிழ்ச்சியுடன் பொங்கலுக்கான வேலைப்பாடுகளை மடமடவென்று செய்து முடித்தார்.
தோ பாயோவில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர், இன்று அதிகாலை பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டு, தை மாதத்தை வரவேற்றனர். வாசலின் இருபுறமும் முழுக் கரும்புகள். தரையிலும் கரும்பு, பானை ஆகியவற்றின் வண்ணக் கோலம்.
சிவகங்கை மாவட்டம், ஆத்திக்காடு தெற்கூரைச் சேர்ந்த திருவாட்டி நீலா, பாரம்பரியச் செழுமை நிறைந்த பொங்கல் கொண்டாட்டங்களை உற்சாகத்துடன் நினைவுகூர்ந்தார்.
“நான் பிறந்த புதுக்கோட்டையிலும், பின்னர் வாழ்க்கைப்பட்ட ஊரிலும் பொங்கல் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது,” என்றார் அவர்.
“தைத்திருநாளன்று வீட்டில் பொங்கல் வைத்து, பின்னர் ஊராருடன் சேர்ந்து பொங்கலிட்டு சூரியனுக்கும் இறைவனுக்கும் படைப்போம். பானையில் பால் பொங்கி வழியும்போது சங்குகள் ஒலிக்கப்படும்; பெண்களின் குலவைச் சத்தமும் சேர்ந்து ஒலிக்கும்,” என்று அவர் கூறினார்.
அதேபோல, மாட்டுப் பொங்கலும் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுவதாகவும், அது சார்ந்த பாரம்பரிய வழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் திருவாட்டி நீலா குறிப்பிட்டார்.
ஊர் மரபுப்படி, இடையர்குல வீடு ஒன்றின் தொழுவத்தில் வரிசையாகத் தோண்டப்பட்ட குழிகளில் வெற்றுப் பானைகள் வைக்கப்படும். பின்னர் அவை நெருப்பு மூட்டிப் பற்றவைக்கப்படும். எட்டுமுழ வேட்டி சுற்றப்பட்ட, பால் நிரம்பிய பெரும்பானை ஒன்றைச் சாமியாடி ஒருவர் கொண்டு வந்து, சூடாக்கப்பட்ட பானைகளில் பாலை நிரப்புவார். அந்தப் பானைகளிலும் பால் பொங்கும் காட்சியைத் திருவாட்டி நீலா பரவசத்துடன் விவரித்தார்.
இருபது மாடுகளை வளர்த்த அவரது குடும்பப் பண்பாட்டில், மாடுகள் மீதான பாசமும் அவற்றின் உழைப்புக்கான நன்றியும் தென்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
“மாடுகளுக்குக் கண்திருஷ்டி சுற்றிய பிறகு மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு போன்றது) விளையாட்டு நடைபெறும். காளையர்கள் அந்த விளையாட்டில் ஈடுபடும் சமயத்தில் ஊரே களைகட்டும்,” என்று திருவாட்டி நீலா மலர்ந்த முகத்துடன் கூறினார்.
இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த அவருடைய மகள் சண்முகம் தமிழ்ச்செல்வி, 2006ல் சிங்கப்பூர் வந்து சிங்கப்பூரரைத் திருமணம் செய்துகொண்டார். வங்கி ஒன்றில் தகவல் தொழில்நுட்பராகப் பணியாற்றும் திருவாட்டி தமிழ்ச்செல்விக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் மாறுபட்டவை என்பதை உணர்ந்த திருவாட்டி தமிழ்ச்செல்வி, தொடக்கத்தில் எளிமையாகக் கொண்டாடினார்.
இருந்தபோதும், மஞ்சள்கொத்து சுற்றப்பட்ட பொங்கல் பானையுடன் பொங்குவது, மாக்கோலத்தைச் சொந்தமாக வரைவது போன்ற வழமைகளைச் சேர்த்து, திருவாட்டி தமிழ்ச்செல்வி தம் இல்லக் கொண்டாட்டங்களை வளமாக்கினார்.
கடந்த 20 ஆண்டுகளாகப் பொங்கலின் முக்கியத்துவம் சிங்கப்பூரில் பெருகி வருவதைக் கண்டு பூரிப்பதாக இவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, லிட்டில் இந்தியாவிற்கு மாடுகளைக் கொண்டுவந்து மக்களின் கண்முன் நிறுத்தும் நடவடிக்கையைத் திருவாட்டி நீலா பாராட்டினார்.
தோ பாயோ இந்திய நற்பணிச் செயற்குழுவில் உள்ள திருவாட்டி தமிழ்ச்செல்வி, பிற இனத்தவரையும் இணைக்கும் பொங்கல் கொண்டாட்டங்களை மனமுவந்து செய்து வருகிறார். தாயாரும் பாட்டியும் கொண்டுள்ள தமிழ் உணர்வு, 17 வயது கணேசன் கவினிடமும் வெளிப்படுகிறது.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சமையல், உணவு விநியோகத் துறையில் பயிலும் கவின், அண்மையில் பொங்கலையும் அதன் பண்பாட்டையும் விளக்கும் திட்டப்பணி ஒன்றில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். பல்வேறு உணவு வகைகளின் பாரம்பரியத்தையும் பரிணாம வளர்ச்சியையும் குறித்த ஆய்வு இவரது பாடத்திட்டத்தில் அங்கம் வகிக்கிறது.
“என் வகுப்பிலுள்ள சீன மாணவர்கள் சிலரும் பொங்கலைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. சிங்கப்பூரில் பிற இனத்தவருக்கு இடையே பொங்கலைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்,” என்றார் கவின்.
உணவுத்துறையில் தமது வாழ்க்கைத்தொழிலை அமைத்துக்கொள்ள விரும்பும் கவின், தம் தாயாரைப் போலவே சமூக நடவடிக்கைகளில் சமையற்கலைவழி அனைவரையும் இணைக்க விரும்புகிறார்.
ஆத்திக்காடாக இருந்தாலும் தோ பாயோவாக இருந்தாலும், தங்கள் இல்லமாக விளங்கும் இடங்களில் பொங்கல்வழி எல்லாரையும் அரவணைக்கின்றனர் இந்த அன்புக் குடும்பத்தினர்.

