ஹாங்காங்கைச் சேர்ந்த பள்ளி முதல்வர் ஒருவர் சாஃப்ரா ஜூரோங்கில் பாதுகாவல் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது காணொளியில் தெரியவந்தது.
அவர் வேலை பார்த்துவந்த பள்ளி, மாணவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வந்தது. அந்தப் பள்ளிப் பயணத்தின்போது பள்ளி முதல்வர் லீ சியூக் ஹிங்கும் சிங்கப்பூர் வந்தார்.
பதவி விலகல் கோரிக்கை மறுப்பு
அவர் பாதுகாவல் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியது காணொளிகளில் பதிவாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 28ஆம் தேதி லீ தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட பள்ளியான கமர்ஷியல் சொசைட்டி உயர்நிலைப் பள்ளி, புதன்கிழமை (ஜூன் 3) அவரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்தது. அதற்குப் பதிலாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லீயின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் பள்ளியில் அவர் பணியாற்றும் கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியாக இருந்திருக்கும். மாறாக, அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பள்ளி கோரியதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.
“ஆகஸ்ட் 31 வரை அவர் பள்ளி முதல்வராகத் தொடர்ந்து பொறுப்பு வகித்தால் அது பள்ளிச் செயல்பாடுகளைப் பெரிதும் பாதிக்கும்; அதோடு, பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த விவகாரத்தை மறந்து இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு அது இடையூறாக இருக்கும்.
“அதனால், திரு லீயை உடனடியாகப் பணிநீக்கம் செய்து பள்ளியில் அவரிடமிருந்த எல்லா பொறுப்புகளையும் மீட்டுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று பள்ளி நிர்வாகம் கூறியதாக ஹாங்காங்கில் இயங்கும் ஆங்கில செய்தித்தாளான சவுத் சைனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டது.
நடத்தையால் அதிருப்தி
பள்ளிப் பயணத்தின்போது லீ தகாத முறையில் பேசியது, ஆசிரியர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நடத்தைக்குப் புறம்பானது என்று அப்பள்ளி குறிப்பிட்டது. பள்ளியின் தலைமைப் பதவியில் இருந்த அவர் மற்றவர் மதிக்கத்தக்க வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது பெற்றோர், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அப்பள்ளி சுட்டியது.

