சமூக நல்லிணக்கம் பேண நீதியை அணுகுவதற்கான நுழைவாயில் இன்றியமையாதது: முரளி பிள்ளை

3 mins read
fbd7e5f1-06a5-4009-ab85-e0f5dc170bad
சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை உரையாற்றுகிறார். - படம்: சாவ்பாவ்

சமூகக் கட்டமைப்பையும் நல்லிணக்கத்தையும் பேண நீதியை அணுகுவதற்கான நுழைவாயில் இன்றியமையாதது என்று சட்ட மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார். 

வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) மாலை நடைபெற்ற 37வது வருடாந்தர சட்ட மறுஆய்வு விரிவுரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு முரளியின் நீண்ட உரையில், சட்டத்துறையின் 200 ஆண்டுகாலப் பயணம், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் சட்டத்தின் ஆட்சியால் விளைந்த நற்பலன், மக்கள் நலனில் நாட்டம் கொண்டு கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கியச் சட்டங்கள், நெறிமுறைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் முக்கிய இடங்களைப் பிடித்தன.

அவ்வகையில், ‘‘சட்டமும் நீதி அமைப்பும் செல்வந்தர்களுக்கு மட்டுமே உரியதாக மாறிவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் முக்கியத் தூணாக நீதியைப் பெறுவதற்கான வழிவாசல்களாகத் திகழ்கின்றன,’’ என்றார் திரு முரளி.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘சச்சரவு, பூசல்கள் ஏற்படும்போது மக்கள் தங்கள் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ள பொதுவான, நடுநிலையான மற்றும் நம்பகமான தளங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. 

“அவ்வகையில், சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதல், நீதிமன்ற செயல்முறைகளை மேம்படுத்துதல் அல்லது சட்ட உதவித் திட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக இத்தகையத் தருணங்களில் நீதிமன்றங்களை நாடுவதற்கான  தடைகளைக் குறைக்கவும் முயன்றுள்ளோம்,” என்று மேலும் தெரிவித்தார். சிறுகோரிக்கை நடுவர் மன்றம், சமூக சர்ச்சைத் தீர்வு மன்றங்கள், வேலை கோரிக்கை நடுவர் மன்றம் ஆகியவை நிறுவப்பட்டதையும் நினைவுகூர்ந்த திரு முரளி, இந்த அமைப்புகள் நீதிபதிகளால் வழிநடத்தப்பட்டு, எளிமையான சட்ட நடைமுறைகளுடன் கட்டுப்படியாகக்கூடிய கட்டணங்களுடன் நீதிக்கான நுழைவாயிலை மேலும் இலகுவாக்குகின்றன என்றார்.

சட்டத்துறை தொழில்நுட்பத்துடன் இணைந்து முன்னேற்றம் அடைந்து வருவதைச் சுட்டிய திரு முரளி, வழக்கறிஞர்களை நியமிக்க இயலாத எளியோருக்குச் சட்டத்தின் திறவுகோலுக்கான சட்ட உதவிகள் குறித்தும் பேசினார்.

‘‘சட்ட உதவிப் பிரிவு இந்த ஆண்டு 68 வயதை எட்டுகிறது. கடந்த 68 ஆண்டுகளில், வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் நீதியை அணுகுவதற்கான வாய்ப்புகளை இந்தப் பிரிவு அளித்துள்ளது,’’ என்றார் அவர்.

இலவச சட்ட உதவிமூலம் இந்த இலக்கைச் சாத்தியமாக்கிய வழக்கறிஞர்களின் பங்களிப்பையும் திரு முரளி பாராட்டினார். 

அனைத்துலக அரங்கில் நிகழ்ந்த கிறைஸ்ட்சர்ச் மற்றும் போண்டாய் கடற்கரை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் இணையத்தில் பரப்பப்பட்ட ‘ஐஎஸ்’ சித்தாந்தத்தால் தூண்டப்பட்டவர்கள் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அவ்வகையில் அண்மையக் காலங்களில் இணையம் வழி அரங்கேறும் தீங்குகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாடு நிறைவேற்றிய பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் தமது உரையின்போது குறிப்பிட்டார் அவர்.

தேசத்தின் நவீன சட்டம் மற்றும் நீதித்துறைக்கான சாசனம் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உருவான படைப்பு அல்ல என்றும்  நீதியையும் பொது நலனையும் நிலைநாட்ட ஒவ்வொரு நாளும் செயலாக்கம் காணும் உழைப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘‘ஒரு சுதந்திர நாடாகக் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இதைச் செய்து வருகிறோம். ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்களது லட்சியங்களிலும் நோக்கங்களிலும் சிறந்து விளங்குவதற்கு, சட்டத்தை நடைமுறை ரீதியாகவும் வெளிப்படையான வழிகளிலும் பயன்படுத்துவதற்குத் தொடர்ந்து முயல்வோம்,’’ என்றும் அவர் உறுதிகூறினார்.

குறிப்புச் சொற்கள்