சைக்கிளோட்டிமீது காரை மோதிய தனியார் வாடகைக் கார் ஓட்டுநருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இப்போது அந்த ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அபராதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சைக்கிளோட்டியின் கவனக்குறைவு, சம்பவத்துக்கு ஓட்டுநர் ஏற்றுக்கொள்ளவேண்டிய பொறுப்பைக் குறைத்தது அதற்குக் காரணமாகும்.
எரிக் இயோ சியோங் பீ என்ற அந்த ஓட்டுநர் சாலையில் பிறரின் நலனைப் போதுமான அளவு கருதாமல் வாகனம் ஓட்டியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனையும் வாகனம் ஓட்ட ஐந்தாண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்திருந்தார். தனது குற்றம் எவ்வளவு மோசமானது என்பதைத் தீர்மானிக்க சைக்கிளோட்டியின் கவனக்குறைவும் கருத்தில்கொள்ளப்படவேண்டும் என்பது அவரின் வாதம்.
முந்தைய வழக்குகளில் இடம்பெற்ற கவனக்குறைவு அம்சத்தை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தான் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மாவட்ட நீதிபதி தவறுதலாக நிர்ணயித்தார் என்றும் இயோ வாதிட்டார்.
புதன்கிழமை (அக்டோபர் 7) வெளியிடப்பட்ட தீர்ப்பில் விபத்துக்குள்ளான சைக்கிளோட்டியின் நடத்தையும் கருத்தில்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி அவ்வாறு செய்யாமல் தவறு இழைத்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இயோவுக்கு விதிக்கப்பட்ட ஒரு வாரச் சிறைத்தண்டனை அதிகபட்சமாக 5,000 வெள்ளி அபராதமாகக் குறைக்கப்பட்டது. அதேவேளை, வாகனம் ஓட்ட இயோவுக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டுகள் தடையில் மாற்றம் இல்லை.
இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி ஊட்ரம் சாலை உள்ள பகுதியில் உள்ள ‘ஸீப்ரா’ கடப்பில் நிகழ்ந்தது.
