புக்கிட் தீமா சாலையில் ஜனவரி 31ஆம் தேதி 28 வயது மோட்டார்சைக்கிளோட்டி விபத்தில் சிக்கினார்.
அவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்தில் மோட்டார்சைக்கிளும் காரும் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையும் தெரிவித்தன.
அப்பர் புக்கிட் தீமா நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா சாலையில் இரவு 11 மணி வாக்கில் விபத்து நடந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்தோம் என்று அதிகாரிகள் கூறினர்.
விபத்து குறித்த காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. காணொளியில் சாலையின் மூன்று தடத்திலும் மூன்று மோட்டார்சைக்கிள்கள் செல்கின்றன. அதில் இடது பக்கம் செல்லும் மோட்டார்சைக்கிள் பின்னால் வந்த கார் ஒன்று, அந்த மோட்டார்சைக்கிளின் பின்பகுதியில் மோதியது.
இதனால் மோட்டார்சைக்கிளோட்டி கீழே விழுந்தார். மோட்டார்சைக்கிள் வலது பக்கம் சென்று சாலையின் ஓரத்தில் விழுந்து நொறுங்கியது.
விபத்து குறித்து 27 வயது கார் ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

