ஜோகூர் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 12) மாலை 5.38 மணிக்கு நிகழ்ந்த விபத்தில் மலேசியப் பாதசாரி ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
அந்த ஆடவர் சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.
ஜோகூர் பாலம் வழியாக அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிங்கப்பூரில் பதிவான கார் ஒன்று அவர் மீது மோதியது.
விபத்துக்கு உள்ளான வாகனத்தை சிங்கப்பூரர் ஒருவர் ஓட்டியதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்து நிகழ்ந்தபோது மழை பெய்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வாகனத்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்ததாகக் குறிப்பிட்ட ஜோகூர் பாரு தென்மாவட்ட காவல்துறைத் தலைவர் ரவுப் சிலாமாட், வாகனம் சாலைத் தடுப்பு மீது மோதி, பிறகு பாதசாரி மீது மோதியதாகத் தெரிவித்தார்.
விபத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
படுகாயம் அடைந்த பாதசாரியின் பெயர் டான் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக உதவி ஆணையர் ரவுப் கூறினார்.
விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த இன்னொரு சிங்கப்பூரருக்கு இடது கரத்தில் காயம் ஏற்பட்டது.
கார் ஓட்டுநருக்கும் அவருக்கும் 20 வயதிலிருந்து 30 வயது வரைதான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.