மத்திய விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (ஜூலை 27) அதிகாலை நடந்த சாலை விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மருத்துவ உதவியாளர் ஒருவர் அவரின் மரணத்தைச் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்தார். காயமடைந்த மூவரும் டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நடந்த விபத்து குறித்து அதிகாலை 4.45 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் அது கூறியது.
டெலிகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், கடுமையாகச் சேதமடைந்த ஒரு கறுப்பு வாகனம் விரைவுச்சாலையின் வெளிப்புறத் தடத்தில் இருந்ததையும் அதன் முன்பகுதியிலிருந்து புகை வருவதையும் காணமுடிந்தது.
அந்த இடத்தில், ஒரு லாரியும் சிவப்பு நிற வாகனமும் இருந்ததையும் காண முடிந்தது.
நிலப் போக்குவரத்து ஆணையம் அதிகாலை 4.50 மணிக்கு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், மெர்ச்சன்ட் சாலைக்குப் பிறகு சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் 1 முதல் 4 வரையிலான தடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் தெரிவித்தது.
காலை 7 மணிக்கு வெளியிட்ட மற்றொரு பதிவில், அந்த நான்குத் தடங்களையும் தவிர்க்குமாறு அது வாகனவோட்டிகளுக்கு அறிவுறுத்தியது.

