புக்கிட் திமா (பிகேஇ) விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (மே 29) காலை நேரிட்ட விபத்தில் சிக்கி 34 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
‘பிகேஇ’ விரைவுச்சாலையில், தீவு விரைவுச்சாலையை (பிஐஇ) நோக்கிச் செல்லும் பகுதியில் காலை 9.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவக் குழுவினர், அந்த ஓட்டுநர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
சமூக ஊடகங்களில் வெளியான விபத்து தொடர்பான காணொளியில், விரைவுச்சாலையின் வலதுபுறப் பாதைகளுக்கு நடுவே மோட்டார் சைக்கிள் சரிந்து கிடப்பதும், அதன் பாகங்கள் சிதறிக் கிடப்பதும் தெரியவந்துள்ளது.
மற்றொரு புகைப்படத்தில், விபத்துக்குள்ளான நபர் சாலையில் விழுந்து கிடக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக 29 வயதான டிரெய்லர் லாரி ஓட்டுநரிடம் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் போக்குவரத்துக் காவல்துறை புள்ளிவிவரப்படி, சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (53 விழுக்காடு) மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களே ஆவர். தற்போதைய இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

