துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நிகழ்ந்த பல வாகன விபத்தை அடுத்து, 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மூன்று கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த 19 வயது இளம் பெண்ணும் காயமடைந்து, சுயநினைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) மாலை நிகழ்ந்தது.
சவுத் புவனா விஸ்டா சாலை வெளிவாயிலுக்குப் பிறகு மாலை 6.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
டெலிகிராம் செயலியில் பகிரப்பட்ட விபத்துக்குப் பிந்தைய காணொளியில், விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளின் சிதறிய பாகங்களுக்கு இடையே குறைந்தது மூன்று கார்கள் இருப்பதைக் காண முடிந்தது.
சம்பவ இடத்தில் பல காவல்துறை வாகனங்களுடன் விரைவுச்சாலை கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக் கட்டமைப்பு வாகன மீட்புப் பிரிவினரும் இருந்தனர். விபத்தின் காரணமாக விரைவுச்சாலையின் மூன்று தடங்கள் மூடப்பட்டிருந்தன.
இரவு 8.15 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது சவுத் புவனா விஸ்டா சாலைக்கு அருகில் துவாஸ் நோக்கிச் செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
நிலப் போக்குவரத்து ஆணையம் மாலை 6.53 மணிக்கு தனது எக்ஸ் தளத்தில் விபத்து குறித்து பதிவிட்டு, இரண்டாவது மற்றும் மூன்றாவது சாலைத் தடங்களைத் தவிர்க்குமாறு அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் இரவு 8.10 மணிக்கு இட்ட பதிவில், சாலையின் முதல் தடத்தையும் தவிர்க்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது. லோவர் டெல்டா சாலை வரை போக்குவரத்து நெரிசல் நீடிப்பதாகத் தெரிவித்தது.
கூகல் மேப்ஸ் தகவல்படி, விபத்து நடந்த சவுத் புவனா விஸ்டா வெளிவாயிலுக்கும் லோவர் டெல்டா சாலைக்கும் இடைப்பட்ட தூரம் 4.6 கிலோமீட்டர் ஆகும்.

