ஹேவ்லாக் சாலையில் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) மாலை நேர்ந்த எஸ்பிஎஸ் பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தில் 63 வயது ஆடவர் உயிரிழந்தார்.
382, ஹேவ்லாக் சாலையில் நேர்ந்த விபத்து குறித்து தங்களுக்கு இரவு ஏழு மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காயமடைந்த நடையர் நினைவிழந்த நிலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் பின்னர் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
பேருந்து ஓட்டுநரான 35 வயது ஆடவர் காவல்துறை விசாரணையில் உதவிவருகிறார்.
எஸ்ஜி ரோடு விஜிலான்டேயின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், எஸ்பிஎஸ் பேருந்து எண் 123க்குப் பின்னால் சாலையில் கிடந்த ஆடவர் ஒருவரைக் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர்கள் கவனித்துக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
காயமுற்ற ஆடவருக்கு அவர்கள் இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்ததைப் பார்க்க முடிந்தது.

