ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நான்கு வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொண்டன. செவ்வாய்க்கிழமை (மே 12) காலை பரபரப்பான போக்குவரத்து நேரத்தில் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் லாரி ஒன்றும் சிக்கியது. அதன் முன்பகுதியில் சிக்கியிருந்த நபரைப் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் மூன்று லாரிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டிருந்தன. ஆறு பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காலை 6.45 மணி வாக்கில் மரீனா கோஸ்டல் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச் சாலையின் பெனாய் ரோட்டில் வெளியேறும் பாதைக்கு முன்பாக விபத்து ஏற்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
லாரியில் இருந்த நான்கு ஆண் பயணிகளும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு ஆடவர்களும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் வயது 36க்கும் 63க்கும் இடைப்பட்டது.
53 வயது லாரி ஓட்டுநரும் மோட்டார் சைக்கிளோட்டியும் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

