ஹவ்காங்கில் சாலை சந்திப்பைக் கடந்தபோது கார் மோதியதில் 73 வயது முதியவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23), ஹவ்காங் அவென்யூ 6க்கும் ஹவ்காங் அவென்யூ 8க்கும் இடைப்பட்ட சாலை சந்திப்பில் அச்சம்பவம் நடந்தது.
அதுகுறித்து அன்றைய தினம் பிற்பகல் 12.15 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அவ்விபத்தில் சிக்கிய ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
எஸ்ஜிஆர்வி (SGRV) எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காட்சிகளில் ஆறு வழித்தடங்களைக் கொண்ட சந்திப்பை மூத்தோர் ஒருவர் கடக்கத் தொடங்குவதைக் காண முடிகிறது.
அவர் பாதி தூரத்தைக் கடந்தபோது, வலது பக்கப் பாதையில் வந்த வேனும் நடுவில் இருந்த பாதையில் வந்த மற்றொரு வேனும் போக்குவரத்து விளக்கருகே நின்றன.
எதிரே வந்த வாகனங்களைக் கவனித்த அந்தப் பாதசாரி, எஞ்சியிருந்த பாதையை வேகமாகக் கடக்க முயன்றார். இருப்பினும், இடப் பக்கப் பாதையில் வந்த கார் அவர்மீது மோதியது.
அவருக்கு உதவிசெய்ய இரு பாதசாரிகள் அவரை நோக்கி விரைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இவை அனைத்தையும் அந்தப் ஃபேஸ்புக் பதிவில் காண முடிந்தது.
69 வயது கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.

