காலாங் - பாய லேபார் விரைவுச்சாலையில் பல கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 47 வயது பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விரைவுச்சாலையின் வலக்கோடியில் நான்கு கார்கள் மோதிக்கொண்டதைக் காண்பிக்கும் காணொளி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது.
அந்தக் கார்களுக்குமுன் சிறிது தூரத்தில் மேலும் இரண்டு கார்கள் நின்றுகொண்டிருந்தன.
சம்பவ இடத்தில் இரண்டு ஆம்புலன்சுகளும் காணப்பட்டன.
தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் காலாங் - பாய லேபார் விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஜூன் 13ஆம் தேதி இரவு 10.10 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
விபத்தைத் தொடர்ந்து பெண் பயணி ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மேலும் மூவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தொடர்கிறது.

