தெம்பனிஸ் விரைவுச்சாலையில் பத்து கார்கள் மோதி விபத்து

1 mins read
எட்டு கார்கள் ‘மிட்சுபிஷி லான்சர்’ வகையைச் சேர்ந்தவை
ac5644b4-e38c-4f5c-9bf7-823b3464b8a2
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் ஜனவரி 10ஆம் தேதி நடந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. - படம்: எஸ்ஜி ரோடு விஜிலான்டே

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் பத்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிச் சனிக்கிழமை (ஜனவரி 10) மாலை 4.55 மணியளவில் விபத்துக்குள்ளாகின.

பொங்கோல் ரோடு வெளியேறும் இடத்திற்கு அருகே சிலேத்தார் விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் இவ்விபத்து நடந்தது.

எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளியில், விரைவுச்சாலையின் இரண்டாவது பாதையில் பத்து கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

ஒரு காரின் முன்பகுதியில் மற்றொரு காரின் முன்பகுதி மோதியிருப்பதைப் போன்ற காட்சிகளை அந்தக் காணொளியில் பார்க்கமுடிந்தது.

இவ்விபத்தில் தொடர்புடைய பத்து கார்களில் எட்டு, 2017ஆம் ஆண்டு உற்பத்தியை நிறுத்திய மிட்சுபிஷி லான்சர் வகையைச் சேர்ந்தவை.

விபத்தில் யாரும் காயமடையவில்லை.

இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது எனக் கூறிய காவல்துறை, அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வருவதற்குள் விபத்தில் சிக்கிய வாகனங்கள் அந்தப் பகுதியைவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகார்மோதல்