எஃகு சாரம் சரிந்து லாரி மீது விழுந்ததில் 23 வயது ஊழியர் உயிரிழந்தார்.
ஜூரோங் போர்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) காலை மணி 9.50க்கு அச்சம்பவம் நடந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
கட்டடத்தின் ஐந்தாம் தளத்திலிருந்து தற்காலிகச் சாரக் கட்டமைப்பு கீழே விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஊழியர் அதில் சிக்கிக்கொண்டதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவினரும் கட்டுமானத் தள ஊழியர்களும் ஹைட்ராலிக் கருவிகளைப் பயன்படுத்தி லாரியில் சிக்கியிருந்தவரை மீட்டனர்.
எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை கூறியது.
கட்டுமான நிறுவனமான ‘எச்பிசி பில்டர்ஸ்’ நிறுவனத்தின் சாரக்கட்டு சார்ந்த அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்த மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியரின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்கிவருவதாகவும் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஜூரோங் கப்பல்துறைமுகம் தெரிவித்தது.
அத்தளத்தில் ஒருங்கிணைந்த கட்டுமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 2027ஆம் ஆண்டு அது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் வேலையிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அனைத்து நிறுவனங்களும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளையும் கண்காணிப்புகளையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


