ஜூரோங் வெஸ்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் 15 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
யுங் குவாங் ரோட்டை நோக்கிச் செல்லும் இன்டர்நேஷனல் ரோட்டில் காலை 7 மணியளவில் விபத்து நேர்ந்ததாக புதன்கிழமை (நவம்பர் 18) காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் 22 வயது லாரி ஓட்டுநரும் 25 முதல் 52 வயதுக்குட்பட்ட பதினான்கு பயணிகளும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 10 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் ஐவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அறிக்கையில் கூறியது.
விசாரணைக்கு ஓட்டுநர் ஒத்துழைப்பதாக காவல்துறை குறிப்பிட்டது.
கடந்த வாரம் கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட இரு மரண விபத்துகளைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நவம்பர் 11ஆம் தேதி காத்தோங்கில் நடந்த விபத்தில் 37 வயது பெண் சைக்கிளோட்டி உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 12ஆம் தேதி சாங்கியில் லாரி மோதிய விபத்தில் தேசிய விளையாட்டு வீரர் ரசல் லீ, 24, மாண்டார்.
