லிம் சூ காங்கில் விபத்து: மூவர் மருத்துவமனையில்

லிம் சூ காங்கில் விபத்து: மூவர் மருத்துவமனையில்

மோட்டார்சைக்கிளும் லாரிகளும் மோதிக்கொண்டன
படம்: ஷின் மின் நாளேடு

05 Oct 2026 - 7:41 pm

2 mins read

லிம் சூ காங் பகுதியில் திங்கட்கிழமை (அக்டோபர் 5), மோட்டார்சைக்கிளும் இரண்டு லாரிகளும் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

கிராஞ்சி வே நோக்கிச் செல்லும் நியோ தியூ சாலையில் காலை 7.45 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

இந்த விபத்தில் 38 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர், 55 வயது லாரி ஓட்டுநர், அவருடன் பயணம் செய்த 51 வயது ஆடவர் மூவரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நினைவோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் விசாரணையில் உதவிவருகிறார்.

சம்பவ இடத்தில் சேதமுற்ற வாகனப் பாகங்கள் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர் ஷின் மின் நாளேட்டிடம் தெரிவித்தார். ஒரு லாரி பிற வாகனங்களை முந்த முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மற்றொரு லாரி மீதும் மோட்டார்சைக்கிள் மீதும் மோதியதைக் காணொளிப் பதிவுகள் காட்டுகின்றன. இதில் ஒரு லாரி தலைகீழாகக் கவிழ்ந்தது.

மோட்டார்சைக்கிள் கடுமையாகச் சேதமடைந்து அதன் பின்பக்க டயரும் முகப்பு விளக்கும் தனியாகக் கழன்றன. வாகனத்தின் அருகே ரத்தக் கறைகளும் காணப்பட்டன. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

போக்குவரத்துக் காவல்துறை ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் முற்பாதியில் சாலை விபத்துகளும் காயங்களும் தொடர்ந்து அதிகரித்தது தெரியவந்தது.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் நிகழ்ந்த மொத்தச் சாலை விபத்துகளில் 55.6 விழுக்காட்டு விபத்துகள் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களையும் பின்னிருக்கைப் பயணிகளையும் உள்ளடக்கியவை. விபத்துகளில் உயிரிழந்தோரில் அதிகமானோர் மோட்டார்சைக்கிளோட்டிகள்.

குறிப்புச் சொற்கள்
விபத்துமருத்துவமனைமோட்டார்சைக்கிள்லாரிசாலை விபத்து