கரையோரப் பூந்தோட்டங்களுக்கு அருகே திங்கட்கிழமை (ஜூன் 1) பிற்பகலில் டாக்சியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தளர்நடைப் பருவக் குழந்தை உட்பட ஐவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மரினா கார்டன்ஸ் டிரைவில் உள்ள கரையோரப் பூந்தோட்டத்தின் தெற்கு நுழைவாயிலுக்கு வெளியே, பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
அதில் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியும் லெக்சஸ் எல்பிஎக்ஸ் வகை காரும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரு வாகனங்களின் பாதுகாப்புக் காற்றுப் பைகளும் செயல்பட்டன.
டாக்சியின் முன்பக்க வலதுபுறப் பகுதியும் காரின் பின்பக்கப் பயணிகள் கதவும் சேதமடைந்திருந்ததை வைத்துப் பார்க்கும்போது, அவை பக்கவாட்டில் பலமாக மோதியிருக்கலாம் எனத் தெரிகிறது.
விபத்து நடந்தவுடன் கரையோரப் பூந்தோட்டப் பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் விரைந்து வந்து உதவினர்.
மேலும், அவர்கள் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இவ்விபத்து குறித்துச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் அளித்த தகவலில், 42 வயது பெண் கார் ஓட்டுநர், 67 வயது ஆண் டாக்சி ஓட்டுநர் 18 மாதக் குழந்தை முதல் 66 வயது வரையிலான மூன்று பயணிகள் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவித்தன.
67 வயது டாக்சி ஓட்டுநரிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் விவரங்களுக்குக் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளதாக ஏஷியாஒன் ஊடகம் தெரிவித்துள்ளது.

