உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே விபத்து; ஒருவர் மருத்துவமனையில்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே விபத்து; ஒருவர் மருத்துவமனையில்

படங்கள்: டெலிகிராம் (இடது), ஒன்மோட்டோரிங்

06 Jul 2026 - 8:33 pm

1 mins read

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்தைத் தொடர்ந்து, 29 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அந்த விபத்து காரணமாக, மூன்று தடங்களைக் கொண்ட அந்த விரைவுச்சாலையின் இரண்டு தடங்களில் போக்குவரத்து முடங்கியது.

மோட்டார்சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் சம்பந்தப்பட்ட அந்த விபத்து, திங்கட்கிழமை (ஜூலை 6) காலை 9.05 மணியளவில், புக்கிட் தீமா விரைவுச்சாலையின் வெளிவழி 10Bக்கு அருகே நிகழ்ந்தது.

காலை 9.30 மணிக்கு வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், விரைவுச்சாலையின் இரண்டு தடங்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தமுடியாமல் முடங்கியதால், வாகனவோட்டிகள் தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அறிவுறுத்தியது.

ஆக வலது தடத்தில் அடர் நிறத்திலான கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் போக்குவரத்துக் கண்காணிப்புக் கருவிகள் தொடர்பான தகவல் பக்கத்தில் காணமுடிந்தது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவ வாகனமும் போக்குவரத்துக் காவல்துறையின் விரைவுச்சாலை சுற்றுக்காவல் வாகனமும் சம்பவ இடத்தில் இருந்ததையும் காணமுடிந்தது.

இந்நிலையில், 29 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ‘ஏசியாஒன்’ செய்தித் தளத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

அதோடு, 56 வயது ஆண் கார் ஓட்டுநர் ஒருவர், காவல்துறை விசாரணையில் உதவிவருவதாகவும் அவை கூறின.

குறிப்புச் சொற்கள்