ஓல்ட் ஏர்போர்ட் ரோட்டில் விபத்து; மருத்துவமனையில் நால்வர்

ஓல்ட் ஏர்போர்ட் ரோட்டில் விபத்து; மருத்துவமனையில் நால்வர்

1 mins read
128a48f5-8522-4eb0-9e0f-59ab90f96ef1
ஓல்ட் ஏர்போர்ட் ரோடு உணவு நிலையத்திற்கு அருகில் விபத்து நடந்த இடத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30), தீயணைப்பு வாகனத்துடன் காவல்துறை அதிகாரிகளும் காணப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஓல்ட் ஏர்போர்ட் ரோடு உணவு நிலையத்திற்கு அருகே வியாழக்கிழமை (ஏப்ரல் 30) பின்னேரம் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்ததை அடுத்து நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

ஓல்ட் ஏர்போர்ட் ரோடு - கேஷியா லிங்க் சாலைச்சந்திப்பில் நடந்த விபத்து குறித்து வியாழக்கிழமை இரவு 10.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது ஒரு காரின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கிக்கொண்டிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இரு கார்களின் ஓட்டுநர்களும் பயணிகள் இருவரும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்கள் நால்வரும் 27 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இரவு 11.45 மணியளவில், சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனம், பழுதான வாகனங்களை இழுத்துச் செல்லும் இழுவை லாரிகள் போன்றவற்றுடன் காவல்துறை அதிகாரிகளும் காணப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

ஒரு காரின் முன்பக்கம் சேதமுற்றிருந்ததாகவும் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அது குறிப்பிட்டது.

விபத்தை அடுத்து, எட்டுப் பேருந்துச் சேவைகள் வேறு வழியில் மாற்றிவிடப்பட்டன என்று மைடிரான்ஸ்போர்ட் செயலியில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்
விபத்துமருத்துவமனைகாவல்துறைவிசாரணை