சிலேத்தார் விரைவுச்சாலையில் விபத்து; மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
8eaa21f8-64d6-4a25-9874-f7c18563bfdb
போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் சாலையில் எச்சரிக்கும் அடையாளங்களுக்கு அருகிலுள்ள பாதையில் அசைவின்றி கிடந்த ஒருவருக்கு இதயவியக்க உயிர்ப்பிப்புச் சிகிச்சையை (CPR) மற்றொருவர் அளிப்பதை ஃபேஸ்புக்கில் வெளியான காட்சிகள் காட்டின. - படம்: FARIZATUL FIRDAUS/ஃபேஸ்புக்

சிலேத்தார் விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) அதிகாலை நடந்த விபத்தில் 42 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் மோட்டார்சைக்கிளும் காரும் விபத்துக்குள்ளானது குறித்துச் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணியளவில் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

மேலும், சுயநினைவின்றி செங்காங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி அங்குச் சிகிச்சை பலனின்றி மாண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. 48 வயது கார் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார்.

சாம்பல் நிற காரும் கவிழ்ந்து கிடந்த மோட்டார்சைக்கிளும் காணப்பட்ட சாலைத் தடத்துக்கு அருகில், அசைவின்றிக் கிடந்த ஒருவருக்கு இதயவியக்க உயிர்ப்பிப்புச் சிகிச்சையை (CPR) மற்றொருவர் அளிப்பதை ஃபேஸ்புக்கில் வெளியான காணொளி ஒன்றில் காண முடிந்தது.

அவ்விடத்தைச் சிலர் சூழ்ந்திருப்பதையும் சாலையில் ரத்தம் தோய்ந்திருப்பதையும் அதில் பார்க்க முடிந்தது.

மற்றொரு காணொளி சாலையில் கிடந்த நபருக்குக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உதவுவதைக் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்
மோட்டார்சைக்கிள்ஓட்டுநர்விபத்துஉயிரிழப்பு