தெம்பனிஸ் அவென்யூ 7ல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) காலை இரண்டு ஈரடுக்குப் பேருந்துகளும் ஒரு காரும் மோதிய விபத்தில் 13 பேர் காயமுற்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தெம்பனிஸ் அவென்யூ 12ஐ நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் அவென்யூ 7ல் விபத்து நேர்ந்ததாகக் காலை 10.15 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது.
பேருந்துகளின் 12 பயணிகளும் 69 வயது ஓட்டுநர் ஒருவரும் மருத்துவமனைக்குச் சென்றபோது சுய நினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.
அவர்களில் ஐந்து பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கும் எட்டுப் பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
மோதிக்கொண்ட இரண்டு பேருந்துகளும் கடுமையாகச் சேதமுற்றதைக் காணொளிகள் காட்டின. ஒரு பேருந்திற்கு முன்புறத்திலும் இன்னொன்றுக்குப் பின்புறத்திலும் சேதம்.
காயமுற்ற இருவருக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சையளிப்பதை நிழற்படங்களில் காணமுடிந்தது.
விபத்தில் சம்பந்தப்பட்ட கார், தனியார் வாடகை வாகனம் என்று சீன நாளேடான சாவ்பாவ் குறிப்பிட்டது.
தெம்பனிஸ் அவென்யூ 7ல் நிகழ்ந்த விபத்தால் சில பேருந்துச் சேவைகள் தாமதமடைந்ததாக எஸ்பிஎஸ் டிரான்சிட், காலை 10.45 மணிக்கு எக்ஸ் தளத்தில் தெரிவித்தது. பின்னர் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை விசாரணை தொடர்கிறது.