சிங்கப்பூரில் கார் பகிர்வுத் தொழில்துறைக்கு ‘கேஸ்டிரஸ்ட்’ எனும் அங்கீகாரத் திட்டத்தை நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கமும் (கேஸ்) புதன்கிழமை (ஏப்ரல் 1) அறிமுகப்படுத்தியுள்ளன.
பயனீட்டாளர்களின் பொதுவான கவலைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், நான்கு முக்கிய அம்சங்களில் கார் பகிர்வுச் சேவைகளை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை அது வழங்குகிறது.
முதலாவதாக, சாலையில் இயக்கப்படுவதற்கான வாகனத்தின் தகுதி, அதன் பாதுகாப்பு, தூய்மை ஆகியவை தொடர்பான விரிவான பராமரிப்பு ஆவணங்களைத் தணிக்கைக்காக கார் பகிர்வுச் சேவை வழங்குநர்கள் வைத்திருக்க வேண்டும். வாகனம் சீராகச் செல்வதை உறுதிப்படுத்த ஒவ்வொரு 10,000 கிலோமீட்டர் ஓடிய பிறகு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதன் இயக்கத்தைச் சரிபார்க்க வேண்டும்.
“வாகனங்கள் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். அவை முறையாகச் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்றும் இரு அமைப்புகளின் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
அடுத்ததாக, கட்டணம் மற்றும் உறுப்பினர் சந்தாப் புதுப்பிப்புத் தொடர்பில், அனைத்துக் கட்டணங்களையும் கூடுதல் கட்டணங்களையும் சேவை வழங்குநர்கள் தெரிவிக்க வேண்டும்.
“உறுப்பினர் சந்தாவிற்கும் அவற்றைப் புதுப்பிப்பதற்கும் பயனரின் விருப்பத் தெரிவு முறையைப் பின்பற்ற வேண்டும். பயனரின் கணக்குகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பின் அதற்குப் புதுப்பிப்புக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது,” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, பயனீட்டாளர் பொறுப்புடைமை, தாமதமாக காரை ஒப்படைத்தல், பழுதுநீக்கக் கட்டணங்கள், கூடுதல் கட்டணம் போன்றவை தொடர்பில் வெளிப்படையான விதிமுறைகளை வழங்க வேண்டும்.
விபத்து நேரிட்டால், பயனர்கள் எதிர்கொள்ளும் நிதி பாதிப்பைக் குறைப்பதற்கான ‘நியாயமான வழியை’ வழங்கும் நோக்கில், அவர்கள் விபத்து சேதத் தள்ளுபடி கோருவதற்கான வசதியையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இறுதியாக, பயனீட்டாளர்களின் புகார்களைச் சேவை வழங்குநர்கள் மூன்று நாள்களுக்குள் பெற்றுக்கொண்டாக வேண்டும். புகாருக்கு 21 நாள்களுக்குள் தீர்வுகாணப்பட வேண்டும்.
கார் பகிர்வுச் சேவையின் தரத்தை மேம்படுத்துவதும் முறையான வாகனப் பரமாரிப்பு, கட்டண வெளிப்படைத்தன்மை, பூசலுக்குத் தீர்வு போன்ற பயனீட்டாளர்களின் பொதுவான கவலைகளுக்குத் தீர்வுகாண்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறப்பட்டது.
திட்டம் தன்விருப்ப அடிப்படையிலானதா என்பதை அறிந்துகொள்ள ஆணையத்தையும் ‘கேஸ்’ அமைப்பையும் பிஸ்னஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் கார் பகிர்வுச் சேவை தொடர்பில் ‘கேஸ்’ அமைப்பிற்கு 184 புகார்கள் வந்தன.

