ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடற்கரையில் குவியும் குப்பை: ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டலாம்

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடற்கரையில் குவியும் குப்பை: ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டலாம்

2 mins read
9acfc6bb-44d4-42b4-aa14-93d244e3eab1
கடற்கரைகளில் ஒதுங்கும் குப்பைகளுக்கு எதிராக சிங்கப்பூர் போராடி வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கின் கடற்கரையில் வழக்கத்தைவிட அதிக அளவில் குப்பை கரை ஒதுங்குகிறது.

இதற்குக் காரணம், சிங்கப்பூர் கடற்கரைகள் ஆண்டின் ஆக அதிக அளவு குப்பைகள் குவியும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

2019 முதல் 2025 வரை அரசாங்கத்தின் கடலோரக் குப்பை தொடர்பான தரவுகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில்தான் கடற்கரைகளில் ஆகக்கூடுதலான குப்பைகள் குவிகின்றன.

சிங்கப்பூரின் மற்ற கடற்கரைகளுடன் ஒப்பிடுகையில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில்தான் மிதக்கும் குப்பைகள் பெருமளவில் சேர்கின்றன.

பொதுமக்களிடமிருந்து வந்த கருத்துகளையடுத்து, இந்த வித்தியாசமான போக்கு குறித்து ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளேடு விரிவாக ஆராய்ந்தது.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் (என்இஏ) கூற்றுப்படி, பருவமழைக் காலங்களில் சிங்கப்பூரின் தெற்கு, வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகக் குப்பைகள் ஒதுங்குகின்றன.

இந்தக் காலகட்டங்களில், சிங்கப்பூர், அதனைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் வீசும் பலத்த காற்று, குடியரசின் கடற்கரைகளில் மிதக்கும் குப்பை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறிப்பாக, ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில், ஈஸ்ட் கோஸ்ட் பார்க் போன்ற தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் குப்பை அதிகமாகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

2019 முதல் 2025 வரையிலான தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் சராசரியாக ஆண்டுக்குச் சுமார் 333.55 டன் கடல்சார்ந்த குப்பைகள் சேர்ந்துள்ளன. இதில் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் மட்டும் சராசரியாக 155.9 டன் குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன.

இது, குப்பை மிகக் குறைவாகச் சேரும் ஜனவரி மாதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

மறுபுறம், டிசம்பர் முதல் மார்ச் வரை வீசும் வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில், வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் குப்பைகள் அதிகம் ஒதுங்குகின்றன.

சிங்கப்பூரின் பொழுதுபோக்குக் கடற்கரைகளில் ஒதுங்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் 97 விழுக்காடு, கப்பல்கள் போன்றவற்றிலிருந்தோ அல்லது கடல் நீரோட்டங்கள் மூலமாகவோ எல்லைகளைக் கடந்து வருகின்றன என்று 2021ஆம் ஆண்டில் என்இஏ மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.

கடல்சார்ந்த குப்பைகளுக்கு எதிரான சிங்கப்பூரின் இந்தப் போராட்டம், தன்னார்வலர்கள், அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் குறைக்கப்படுகிறது.

‘ஸ்ட்ரைடி’, ‘எஸ்ஜி பீச் வாரியர்ஸ்’ போன்ற அரசாங்க சார்பற்ற அமைப்புகள் கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, கடல்சார்ந்த குப்பைகளை அகற்றுவதற்கான தேசிய அளவில் உத்திப் பூர்வ திட்டத்தைத் தொடங்கியது.

இந்த நிலையில் பருவமழைக் காலங்களில் கடற்கரைகளைத் தூய்மையாக வைத்திருக்க, வழக்கமாக வாரத்திற்கு நான்கு முறை மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகள், தற்போது நாளைக்கு இருமுறை என அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்