குழந்தை ஒன்றைக் கொடுமைப்படுத்தியதாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, செப்டம்பர் 19 அன்று பிள்ளைவதை தொடர்பில் 31 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த ஆண் குழந்தையின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க, குற்றம் சாட்டப்பட்ட அந்த 31 வயது ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
குழந்தையின் தலையைத் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் சுமார் ஆறு விநாடிகள் முக்கியதாகவும், தண்ணீர் நிரப்பப்பட்ட போத்தலை குழந்தையின் வாயில் திணித்ததாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆடவருக்கும் குழந்தைக்கும் இடையே எத்தகைய பந்தம் உள்ளது என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் விவரிக்கவில்லை.
சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் குழந்தைக்கு ஒன்பது முதல் பதினோரு மாதங்கள் வரை வயது ஆகியிருந்தது.
மேலும் அந்த ஆடவர், குழந்தையைப் பலமுறை கழுத்தை நெரித்ததாகவும் குழந்தையின் பனியனில் ஒரு கொக்கியை மாட்டி அலமாரியில் தொங்கவிட்டு அலமாரிக் கதவை மூடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குழந்தயைத் துன்புறுத்தியது நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எட்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையுடன் $8,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

