நிலையான சமூக ஏற்றத்தைக் காண பொறுமையும் முயற்சியும் தேவை: அதிபர் தர்மன்

நிலையான சமூக ஏற்றத்தைக் காண பொறுமையும் முயற்சியும் தேவை: அதிபர் தர்மன்

3 mins read
8a9b67a5-08f5-4807-ac55-934f263854de
‘ரீச்’ குடும்பச் சேவை நிலையத்தில் இணைந்திருக்கும் குழந்தைப் பயனாளிகளுடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூடைப்பந்து விளையாடினார். - படம்: சாவ்பாவ்

சமூக மேம்பாட்டில் கிட்டும் வெற்றி எப்போதுமே நிலையான ஒன்றல்ல என்றும் சிங்கப்பூரிலும் பல்வேறு நாடுகளிலும் காணும் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, இன்று நாம் அடைந்துள்ள முன்னேற்றம் எதிர்காலத்தில் நிலைத்திருக்காமல் போகலாம் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

இந்த எதார்த்த நிலைதான் தொடர்ச்சியான, கவனமான அணுகுமுறையை அவசியமாக்குகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சின் மிங்கில் உள்ள ‘ரீச்’ குடும்பச் சேவை நிலையத்தைத் தமது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியுடன் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) சுற்றிப்பார்த்த அதிபர், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவ்வாறு கூறினார்.

சின் மிங்கில் உள்ள ‘ரீச்’ குடும்பச் சேவை நிலையத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும் சுற்றிப்பார்த்து அவர்களது சேவைகளைப் பற்றி அறிந்துகொண்டனர்.
சின் மிங்கில் உள்ள ‘ரீச்’ குடும்பச் சேவை நிலையத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும் சுற்றிப்பார்த்து அவர்களது சேவைகளைப் பற்றி அறிந்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்

இதே சிந்தனையை மையமாகக் கொண்டு அதிபர் சவால் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையும் தற்போது உருமாறியுள்ளதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட அதிபர் சவால் திட்டம், தற்போது குறுகியக் கால நிவாரணங்களை வழங்குவதிலிருந்து நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அடிப்படையில் மாறியுள்ளது.

ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் மானியங்களுக்குப் பதிலாக, இப்போது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடித்த நிதியுதவியை இத்திட்டம் வழங்குகிறது. உடனடித் தேவைகளை மட்டும் தீர்க்காமல், மக்களின் ஆற்றலை வளர்ப்பதே அந்தப் புதிய அணுகுமுறையின் நோக்கமாகும்.

ஏற்கெனவே தொடரும் திட்டங்களுடன் இவ்வாண்டு புதிதாக 62 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட இருமடங்காக இந்த ஆண்டு மொத்தம் 121 திட்டங்களுக்கு அதிபர் சவால் ஆதரவளிக்கிறது.

சிறுவயது குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் வரை பலதரப்பட்ட பிரிவுகளில் அத்திட்டங்கள் அமைந்துள்ளன.

சமூகத்தில் மக்கள் சந்திக்கும் சவால்களின் தன்மையைக் குறிப்பிட்ட அதிபர், “பிரச்சினைகள் வழக்கமாகப் பல பரிமாணங்களைக் கொண்டவை. அவை நிதியியல் சார்ந்தவை மட்டுமல்ல, உணர்வுபூர்வமானவையாகவோ உளவியல் ரீதியானவையாகவோகூட இருக்கலாம்,” என்றார்.

காலப்போக்கில் அவற்றைக் கவனமாகக் கையாளத் தவறினால் இன்று நாம் எட்டியுள்ள முன்னேற்றம் எளிதில் சிதைந்துவிடக்கூடும் என அவர் எச்சரித்தார்.

சமூக, குடும்பச் சூழலால் பின்னடைவைச் சந்தித்தவர்கள் வாழ்வில் நிலையான ஏற்றம் காண பொறுமை தேவை. அதோடு, பல புதிய உத்திகளைக் கையாளுவது, இடைவிடாத பரிவு, சரியான வழிகாட்டுதல், ஒவ்வொரு தனிநபரின் திறமைமீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பது ஆகியவை மிக முக்கியம் எனவும் திரு தர்மன் குறிப்பிட்டார்.

அதிபர் சவால் திட்டத்தின்கீழ், கலை, விளையாட்டுத் துறைகளிலும் திறன்களை வளர்க்க விரிவான ஆதரவு வழங்கப்படுவதோடு, சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் தனிநபர்களை ஊக்குவிக்கச் சிறப்பு ஆய்வுநிதியும் (Fellowship) வழங்கப்படுகிறது.

நிலையத்தைச் சுற்றிப்பார்த்த பிறகு, ‘ரீச்’ அமைப்பின் திட்டங்களில் இணைந்திருக்கும் சில இளம் பயனாளிகளைச் சந்தித்த அதிபர் தர்மன் அவர்களுடன் கூடைப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

‘ரீச்’ குடும்பச் சேவை நிலையத்தில் இணைந்திருக்கும் குழந்தை பயனாளிகள், நிலைய ஆலோசகர்கள், மற்ற அதிகாரிகளுடன் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும்.
‘ரீச்’ குடும்பச் சேவை நிலையத்தில் இணைந்திருக்கும் குழந்தை பயனாளிகள், நிலைய ஆலோசகர்கள், மற்ற அதிகாரிகளுடன் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகியும். - படம்: சாவ்பாவ்

‘ரீச்’ சமூக சேவையின் புதிய முன்னெடுப்பான ‘புரோஜெக்ட் ஜெமினேட்’ (Project GEMinate) இவ்வாண்டு இணைந்துள்ள புதிய திட்டங்களில் ஒன்றாகும்.

துன்புறுத்தல், புறக்கணிப்பு, சவாலான குடும்பச் சூழல் போன்ற பாதகமான அனுபவங்களை எதிர்கொண்ட 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அது ஆதரவளிக்கிறது. விளையாட்டுகள், விளையாட்டுச் சிகிச்சை நிகழ்ச்சிகள் வாயிலாகக் குழந்தைகள் தங்கள் மன உளைச்சலிலிருந்து முன்கூட்டியே விடுபடவும் பின்னடைவிலிருந்து மீண்டுவரும் திறனை வளர்த்துக்கொள்ளவும் அத்திட்டம் உதவுகிறது.

அங் மோ கியோ தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 11 வயது அன்பாள் மனி லிஷாந்த் இத்திட்டத்தின் பயனாளிகளில் ஒருவர். ஒருகாலத்தில் கூச்ச சுபாவத்துடன் தனித்துச் செயல்பட்ட அவர், ‘ஸ்போர்ட்கேர்ஸ்’ அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் ‘ரீச்’ விளையாட்டுத் திட்டத்தில் இணைந்த பிறகு மற்றவர்களுடன் வெளிப்படையாகப் பழகத் தொடங்கினார்.

‘ஃபுளோர்பால்’, ‘ஃபிரிஸ்பீ’ போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டதன் மூலம் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொண்ட அவர், வழிகாட்டிகளின் ஆலோசனைகளால் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்.

தற்போது, தம்மைப் போன்ற கூச்ச சுபாவம் உள்ள மற்ற குழந்தைகளையும் இத்திட்டத்தில் சேருமாறு லிஷாந்த் ஊக்குவிக்கிறார். வழிகாட்டிகள் மிகவும் அன்பாக இருப்பார்கள் என்றும் மீள்திறனை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

“லிஷாந்த் மகிழ்ச்சியாகச் சிரிப்பதையும் ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒன்றை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் பார்ப்பது எனக்குப் பெரும் மனநிறைவைத் தருகிறது. அவன் முன்பைவிட அதிகத் தன்னம்பிக்கை கொண்டவனாக மாறியுள்ளான்,” என்றார் அவரது தாயார் திருவாட்டி தமிழ்ச்செல்வி.

குறிப்புச் சொற்கள்