அடையாள அட்டை எண்களைத் திரட்டுதல், பயன்படுத்துதல், பகிர்தல் என்பது குறித்த வழிகாட்டிமுறைகளை தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் மேம்படுத்தி வருகிறது.
அடையாள அட்டை எண்களை பாதி மறைத்துப் பயன்படுத்தும் தற்போதைய நடைமுறையிலிருந்து விலகும் எண்ணம் அரசாங்கத்துக்கு உள்ளதாக டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையை அடுத்து வழிகாட்டிமுறைகள் மாற்றம் காண்கின்றன.
கட்டணம் ஏதும் செலுத்தாமல் ‘பிஸ்ஃபைல்’ என்ற பெயரில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கப்பட்ட தளத்தில், ஒருவர் தேடுதல் அம்சத்தைப் பயன்படுத்தி முழு அடையாள அட்டை எண்களைப் பெற முடிவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்ததை அடுத்து அந்தத் தேடுதல் அம்சம் டிசம்பர் 13ஆம் தேதி தற்காலிகமாக முடக்கப்பட்டது.
இருப்பினும், அடையாள அட்டை எண்ணை மறைக்கும் தேவை இல்லை என்றும் அதனால் அதிகப் பயன் இல்லை என்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு டிசம்பர் 14ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
“அடையாள அட்டை எண்ணை பாதி மறைக்கும் தற்போதைய நடைமுறையை மாற்றுவது குறித்து பொதுமக்களிடம் விளக்கித் தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்,” என்றார் அமைச்சின் பேச்சாளர். அதன் பின்னரே, தற்போதைய நடைமுறையை மாற்றுவதாக அரசாங்கம் திட்டமிட்டிருந்தது என்றார் அவர்.
‘ஏக்ரா’வின் புதிய இணையவாசல், அரசாங்கத்தின் நோக்கத்தை முந்திக்கொண்டதாக அமைச்சு குறிப்பிட்டது. அரசாங்க அமைப்புகளுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தத் தவறியதற்காகவும் தேவையற்ற கவலையைப் பொதுமக்களுக்குத் தந்ததற்காகவும் மன்னிப்பும் கோரியது.
இதற்கிடையே, ஒருவரின் தனியுரிமைக்கு அல்லது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்த அந்தரங்கத் தகவலாக அடையாள அட்டை எண்கள் கருதப்படக்கூடாது. முழுப் பெயர்களைப் போன்று அடையாள அட்டை எண்கள் பார்க்கப்படவேண்டும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
“ஒவ்வொருவரையும் தனித்து அடையாளம் காண்பதற்காகப் பெயர்கள் பயன்படுத்தப்படுவது போலவே அடையாள அட்டை எண்களும் பயன்படுத்தப்படுகின்றன. நமது முழுப் பெயர்களை மற்றவர்களுடன் ஒளிவுமறைவின்றிப் பகிர்ந்துகொள்ளும் அதே முறையில் ஒருவரின் முழு அடையாள அட்டை எண்ணும் பகிரப்படுவதில் எவ்வித வருத்தமும் இருக்கக்கூடாது,” என்றார் பேச்சாளர்.
தொடர்புடைய செய்திகள்
தகவல் பெறவோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ அங்கீகரிக்கும் ஒரு செயல்முறையாக அடையாள அட்டை எண்களை அமைப்புகள் நம்பி இருக்கும்போது அந்த எண்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றார் பேச்சாளர்.
பாதுகாப்பு உணர்வைப் பொய்யாகத் தருவதைத் தவிர்க்க, பாதி மறைக்கப்பட்ட அடையாள அட்டை எண்களின் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகள் படிப்படியாக அகற்றி வருகின்றன.