விலங்கு நல ஆய்வு, கல்விச் சங்கத்தின் (ஏக்கர்ஸ்) வனவிலங்கு மீட்பு நிலையம், தனக்கு ஒதுக்கப்பட்ட 2 ஹெக்டர் நிலத்தில் கால்வாசிப் பகுதியை மட்டுமே 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளது.
2007ஆம் ஆண்டு வாக்கில், சுங்கை தெங்காவில் உள்ள அந்த நிலத்தின் பெரும்பகுதி பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
விலங்குக் காப்பகத்தைக் கட்ட ஏக்கர்ஸ் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரரால் அந்த நிலப்பகுதி மாசுபட்டதே இதற்குக் காரணம்.
“நிலமும் வாய்ப்பும் பறிபோனதாகவே நான் கருதினேன். நம்மிடம் இருந்திருக்க வேண்டியது இல்லாமல் போய்விட்டது,” என்று ஏக்கர்ஸ் இணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆனால் மே 17ஆம் தேதி, நிலத்தடி நீர் சோதனை மூலம் நிலப்பகுதி பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்த பின்னர் சங்கத்திடம் 1.5 ஹெக்டர் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் நில ஆணையம், பயன்படுத்தப்படாத நிலப்பகுதியில் ஏற்பட்ட மாசுபாடு குறைந்துவிட்டதாகவும் தற்போதைய நிலச்சூழல் சங்கத்தின் முன்மொழியப்பட்ட பயன்பாட்டிற்கு பொருத்தமானது என்றும் ஏக்கர்ஸ் சுற்றுச்சூழல் ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டது.
“ஆணையம் இந்தக் கண்டுபிடிப்புகளை மறுஆய்வு செய்து, பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டிற்காக ஏக்கர்ஸ் சங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
“ஆனால், பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய, அந்த ஆலோசகர் பரிந்துரைத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது உட்பட்டது,” என்று ஆணையம் மேலும் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய அரை ஹெக்டர் நிலப்பகுதியில் சுமார் 125 வெளிநாட்டு விலங்குகளை வைத்திருப்பதுடன் பல ஆண்டுகளாக மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனவிலங்குகளைப் பராமரிக்கும் ஏக்கர்ஸ், இதுவரை குறைவான இடத்தில் நிறைய செய்ய வேண்டியிருந்தது.
இப்போது செயல்பாட்டிற்குக் கூடுதல் நிலப்பகுதி கிடைத்திருப்பதால், மரங்களையும் தாவர வகைகளையும் தக்கவைத்துக் கொள்ளும் அதேவேளையில் ஒரு சரணாலயத்தை அமைக்க திரு கலைவாணன் விரும்புகிறார்.
நிலத்தைத் திரும்பப் பெறுவதும் வனவிலங்கு மீட்பு நிலையத்தை பெரிதாக்குவதற்கான திட்டங்களும், மே 18ஆம் தேதி மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற ஏக்கர்ஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.

