சந்தேகப் பின்னணி கொண்ட குழந்தைகளைத் தெரிந்தே அழைத்துவரும் தத்தெடுப்பு முகவைகள்மீது நடவடிக்கை: கோ பெய் மிங்

2 mins read
2d4a0210-495e-4089-a103-4fb6d28f2ede
புதன்கிழமை (ஜனவரி 14) நாடாளுமன்றத்தில் பேசும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூருக்கு அழைத்து வரப்படும் குழந்தைகள் குறித்து தத்தெடுப்பு முகவைகள் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் சந்தேகத்திற்குரிய பின்னணி கொண்ட குழந்தைகளைத் தெரிந்தே அழைத்து வரும் முகவைகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங் புதன்கிழமை (ஜனவரி 14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தோனீசியக் கடத்தல் கும்பல் ஒன்று சிங்கப்பூருக்குக் குழந்தைகளை அனுப்பியதாக அண்மையில் வெளியான தகவல்கள் குறித்து அவர் பதிலளித்தார்.

இங்குள்ள தத்தெடுப்பு முகவைகள் வணிக ரீதியாகச் செயல்பட்டாலும், அவை மேற்கொள்ள வேண்டிய ஆய்வு நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை அரசாங்கம் வைத்துள்ளதாக திரு கோ கூறினார்.

இந்தக் கடத்தல் கும்பல் தொடர்பான புகார்கள் குறித்து சிங்கப்பூர், இந்தோனீசிய அரசாங்கங்கள் இணைந்து ஆய்வு செய்து வருவதாக உள்துறை அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் ஜனவரி 9ஆம் தேதி தெரிவித்திருந்தன.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகளுக்கான குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களைத் தத்தெடுத்துள்ள பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் அவர்களைத் தொடர்புகொண்டு வருவதாகவும் அமைச்சுகள் தெரிவித்தன.

“குழந்தைகளின் பின்னணியைப் பற்றித் தெரியாமல் இருந்தும் அல்லது அவர்கள் சந்தேகத்திற்குரிய பின்னணியைக் கொண்டவர்கள் என்பது பற்றித் தெரிந்தும், முகவைகள் அவர்களைத் தொடர்ந்து அழைத்து வருவது கண்டறியப்பட்டால், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உள்துறை துணை அமைச்சருமான திரு கோ எச்சரித்தார்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட எத்தனைக் குழந்தை தத்தெடுப்புகள் மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தெளிவும் விரைவான தீர்வும் கிடைக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு எவ்வாறு உதவுகிறது என்றும் பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத்தொகுதி எம்.பி. சில்வியா லிம் கேள்வி எழுப்பினார்.

தத்தெடுப்பு உத்தரவுகள் வழங்கப்படுவதற்கு முன்பே, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அதிகாரிகள் அல்லது அமைச்சின் பங்காளிகள் இத்தகைய சந்தேகத்திற்குரிய சூழல்களைக் கண்டறிந்திருக்க முடியுமா என்றும் அவர் கேட்டார்.

தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தத்தெடுப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை அல்லது விசாரணை காலக்கெடு குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கருத்து தெரிவிக்க முடியாது என்று திரு கோ கூறினார்.

இருப்பினும், இதில் சிங்கப்பூர் மட்டுமின்றி இந்தோனீசிய அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதால், அமைச்சு முடிந்தவரை விரைவாகச் செயல்பட முற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தத்தெடுப்புநாடாளுமன்றம்நடவடிக்கைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு