குறைந்த ஊதிய ஊழியர்களுக்கான ஆதரவு தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் முழு நேர உள்ளூர் ஊழியரணிக்கான உள்ளூர்த் தகுதிச் சம்பளம் 1,600 வெள்ளியிலிருந்து 1,800 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
பிரதமர் வோங் இதனை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தமது வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவித்தார்.
அத்துடன், செலவைக் குறைக்க வர்த்தகங்களுக்கு உதவுவதற்கு படிப்படியாக உயரும் சம்பள உதவித்தொகைத் திட்டம் (Progressive Wage Credit Scheme) மேம்படுத்தப்படும் என்றும் திரு வோங் கூறினார்.
“அந்தத் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும். உதவித்தொகை ஆதரவுத் திட்டத்திற்குத் தகுதிபெறுவதற்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாங்கள் அடுத்த ஆண்டு முதல் 100 வெள்ளியிலிருந்து 200 வெள்ளிக்கு உயர்த்தவுள்ளோம். ஊழியர்கள் மீது முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இது ஊக்கம் தரும் வெகுமதியாக அமையும்,” என்று திரு வோங் கூறினார்.
முத்தரப்புப் பங்காளிகளுடன் அரசாங்கம் உருவாக்கியிருந்த படிப்படியான சம்பள முறையை இந்த நடவடிக்கைகள் மேம்படுத்துவதாக அவர் கூறினார்.
“பொதுவான குறைந்தபட்ச சம்பளத்தைத் தாண்டி, சம்பளத்துடன் திறன்கள், புத்தாக்கம், வாழ்க்கைத்தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை இணைக்க முற்படும் இந்தத் திட்டம் பலனளிக்கிறது,” என்றார் பிரதமர் வோங்.
இந்தச் சம்பள முறையை ஆதரிக்கும் வகையில் திறன் மேம்பாடு செய்யும் ஊழியர்களின் மணிநேரப் படித்தொகை உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நீண்ட காலத்திற்கு நீடிக்கும் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு, வேலை நலன் ஆதரவுத்திட்டத்தின்கீழ் கூடுதல் ஆதரவை நான் கடந்த ஆண்டு அறிவித்தேன். இந்தத் திட்டத்தின் அடிப்படைப் பிரிவை நாம் மேம்படுத்தவுள்ளோம்,” என்று பிரதமர் கூறினார்.

