லிட்டில் இந்தியாவில் எலிகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை தொடரும்: என்இஏ

லிட்டில் இந்தியாவில் எலிகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை தொடரும்: என்இஏ

2 mins read
மார்ச், ஏப்ரலில் நடந்த சோதனைகளில் எலி வளைகள் கண்டறியப்படவில்லை
1b93ff62-7325-413d-b6b8-0e1326b799c3
தேக்கா மால் கட்டடத்தில் உள்ள உணவு மையம் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர எலி ஒழிப்பு நடவடிக்கைகளின் பலனாக அவை ஒளிந்திருக்கும் வளைகளின் எண்ணிக்கை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வியாழக்கிழமை (ஜூன் 4) அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 37 எலி வளைகள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து எலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, அவற்றின் நடமாட்டம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.

இவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வாரியம் நடத்திய சோதனைகளில் எலிகள் மறைந்து வாழும் வளைகள் எதையும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கண்டறியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எலிகளுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான செயல்பாடுகள், வர்த்தகர்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஊக்கமளிக்கும் நிலவரத்தின் காரணம் என்று வாரியம் குறிப்பிட்டது.

தற்போதைய நிலவரம் மேம்பட்டிருந்தாலும் எலிகள் மீண்டும் வராமல் தடுப்பது, பொதுமக்களின் கூட்டுப் பொறுப்பாகும் என்று வாரியம் நினைவூட்டியது. எலிகள் நடமாட்டம் அல்லது அவை வாழும் வகையில் சுற்றுச்சூழல் அமைந்திருந்தால், அது குறித்து தகவல் அறிந்தோர்கள், ‘ஒன்சர்வீஸ்’ என்ற செயலியின் வழியாகப் புகார் அளிக்கும்படி வாரியம் கேட்டுக்கொண்டது.

உணவுப் பயன்பாடு உள்ள இடங்களைத் தவிர்த்து,எம்ஆர்டி ரயில் நிலையங்களிலும் எலித் தொல்லை மே மாதம் காணப்பட்டது. கிழக்கு, மேற்கு ரயில் தடத்தில், எலி அங்கும் இங்கும் ஓடித் திரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு தூய்மைப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.

எம்ஆர்டி நிலையங்களில் எலிகள் நடமாட்டம் குறித்த விசாரணையும் நடந்துவருகிறது.

ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்கள், உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கும்படி எஸ்எம்ஆர்டி நிறுவனம் கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே, எலித் தொல்லைகளுக்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்த, தேசிய சுற்றுப்புற வாரியம், காணொளி பகுப்பாய்வு மற்றும் இயந்திரக் கற்றல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

வாரியம் தற்போது எலிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அவற்றின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறியவும் வெப்ப மற்றும் செயலற்ற அகச்சிவப்பு கேமராக்களைப் பயன்படுத்துகிறது.

“எலிகளை அடையாளம் காண, காணொளிகளை ஆய்வு செய்யும் கைமுறைப் பணியை இயந்திரக் கற்றல் குறைக்கும்,” என்று என்இஏவின் எலிக் கட்டுப்பாட்டுப் பிரிவின் உதவி மேலாளர் திரு பெர்னார்ட் சியாங் கூறினார்.

“இதன் மூலம், அதிக செயலற்ற இரவுநேரக் கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தவும், பரவலான பகுதியைக் கண்காணிக்கவும் தேவையான மனிதவளம் எங்களிடம் இருக்கும்,” என்று திரு சியாங் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்