ரத்த தானம் செய்ய கூடுதலானோரை ஊக்குவிக்க நடவடிக்கை

வருங்காலத்தில் ரத்தத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கத் திட்டம்

ரத்த தானம் செய்ய கூடுதலானோரை ஊக்குவிக்க நடவடிக்கை

2 mins read
b21be9b1-9bfd-4c5c-ba04-302569e28763
சுகாதார அறிவியல் ஆணையத்தின் ரத்த வங்கியில் புதன்கிழமை (ஏப்ரல் 15) ரத்த தானம் செய்தோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 2033ஆம் ஆண்டு வாக்கில் ரத்தத்துக்குத் தட்டுப்பாட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கவும் ரத்த தானம் செய்ய இளையர்களை ஊக்குவிக்கவும் ‘ஆரோக்கியப் புள்ளி’ வெகுமதிகள் உள்ளிட்ட புதிய சலுகைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

“வரும் காலங்களில் சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை எதிர்கொள்ள இப்போதே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் புதன்கிழமை (ஏப்ரல் 15) தெரிவித்தார்.

சுகாதார அறிவியல் ஆணையத்தின் ரத்த வங்கியில் புதன்கிழமை (ஏப்ரல் 15) ரத்த தானம் செய்தோருடன் அளவளாவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் ரத்த வங்கியில் புதன்கிழமை (ஏப்ரல் 15) ரத்த தானம் செய்தோருடன் அளவளாவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்போதைய நிலவரப்படி, ரத்தத்திற்கான தேவையைவிட விநியோகம் அதிகம் இருந்தாலும், எதிர்காலத்தில் நிலைமை மாறக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

“அடுத்த ஏழு ஆண்டுகளில், ரத்தத்திற்கான தேவை அதிகரித்து, விநியோகம் குறையும் சூழல் ஏற்படக்கூடும்,” என்றார் அவர்.

ரத்த விநியோகத்தைவிட தேவை அதிகரித்தால், அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போகவோ ரத்து செய்யப்படவோ சாத்தியமுள்ளது. இதனால் ரத்த சோகை உள்ள நோயாளிகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் மருத்துவச் சிக்கல்கள் அல்லது உயிரிழப்புகூட ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

தேசிய ரத்தத் திட்டத்தின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘80க்கு 80’ ரத்த தான நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றினார். இத்திட்டத்தின்கீழ், 80 அமைப்புகளைச் சேர்ந்த தலா 80 ஊழியர்கள், 80 யூனிட் ரத்த தானம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2026 பிற்பாதியிலிருந்து, ரத்த தானம் செய்வோர்க்கு ‘ஹெல்தி 365’ செயலி வழியாக ஆரோக்கியப் புள்ளிகள் வழங்கப்படும். இவற்றைக் கொண்டு பொதுப் போக்குவரத்திலும் சில உணவகங்கள், பேரங்காடிகளிலும் பயன்பாட்டுக்காக மின்பற்றுச்சீட்டுகளைப் பெறலாம். ஆரோக்கியப் புள்ளிகளைக் கொண்டு மெடிஷீல்டு லைஃப் காப்புறுதிச் சந்தாவில் $580 வரை தள்ளுபடியும் பெறலாம்.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 130,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்படுகிறது. தற்போது ரத்த தானம் செய்ய 77,000க்கும் அதிகமானோர் உள்ளனர். இது, சிங்கப்பூர் மக்கள்தொகையில் 1.3 விழுக்காடாகும்.

அடுத்த பத்தாண்டுகளில், ரத்தத்திற்கான தேவை ஆண்டுக்கு 1 விழுக்காடு முதல் 1.3 விழுக்காடு வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள்தொகை மூப்படைவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பும் இதற்கு முக்கியக் காரணங்கள்.

இளையர்களின் பங்களிப்பு குறைவு

ரத்த தானம் செய்யும் இளையர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதும் கவலைக்குரிய ஒன்று. 2025ல் ரத்த தானம் செய்தோரில் 12 விழுக்காட்டினர், அல்லது 9,600க்கும் குறைவானோர், 16 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். ஒப்புநோக்க, 2015ல் இந்த விகிதம் 28 விழுக்காடாக, அல்லது ஏறக்குறைய 20,000 பேராக இருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் இளையர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு குறைந்திருப்பதும் அவர்களிடையே ரத்த தானம் செய்யும் போக்கு குறைந்திருப்பதும் இதற்குக் காரணம் என்று சுகாதார அறிவியல் ஆணையமும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்