கடலோரப் பகுதிகளை பாதுகாத்து மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்: டெஸ்மண்ட் லீ

கடலோரப் பகுதிகளை பாதுகாத்து மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்: டெஸ்மண்ட் லீ

1 mins read
ce99008a-2862-4e8d-ac9d-f76aec2e590b
அடுத்த ஆறு மாதங்களிலும் அதற்கு அப்பாலும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் முயற்சிகள் இடம்பெறும் என்றார் அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம்

எண்ணெய் கசிவு சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து மீட்டெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் குறித்து அரசாங்க அமைப்புகள், சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் திங்கட்கிழமை (ஜூன் 24) கூறினார்.

இதுகுறித்து ஜூன் 21ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தனர் என்றும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டெஸ்மண்ட் லீயுடன் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்கும் கலந்துகொண்டார்.

வனவிலங்கு மீட்பு செயல்முறைகளை வலுப்படுத்துதல், வனவிலங்கு மற்றும் பல்லுயிர் மீது ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்காணித்து மதிப்பிடுதல், எண்ணெய் கசிவால் ஏற்படும் நீண்டகால தாக்கங்களைப் புரிந்து கொள்ள அறிவியல் ஆராய்ச்சி நடத்துதல் போன்ற பரிந்துரைகள் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது.

“ஒன்றாக இணைந்து இந்தத் திட்ட நடவடிக்கையை உருவாக்குகிறோம், அடுத்த ஆறுமாதங்களிலும் அதற்கு அப்பாலும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து மீட்டெடுக்கும் முயற்சிகள் இடம்பெறும்,” என்றார் டெஸ்மண்ட் லீ.

தேசிய ஊடக நிலையத்தில் நடந்த அமைச்சுகளின் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து விவரித்தார் அவர்.

குறிப்புச் சொற்கள்