பலமுறை நினைவூட்டப்பட்ட பிறகும் 141 லாரிகளின் உரிமையாளர்கள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தத் தவறியுள்ளனர் என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தெரிவித்துள்ளது.
சட்டப்படி அவர்கள் ஜனவரி 1ஆம் தேதிக்குள் அவற்றை லாரிகளில் பொருத்தியிருக்கவேண்டும். குறிப்பிட்ட அந்த காலக்கெடுவுக்குள் 2,434 லாரிகள் அவ்வாறு செய்திருக்க வேண்டும்.
அவற்றில் ஏறத்தாழ 6 விழுக்காட்டு உரிமையாளர்கள் அதனைச் செய்யவில்லை என்பதால் போக்குவரத்துக் காவல்துறை அவர்கள் மீது அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
சட்டப்படி வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாத லாரி உரிமையாளர்கள், அவற்றின் சாலை வரிகளைப் புதுப்பிக்க முடியாது. அவர்களுக்கு $1,000 அபராதமும் மூன்று மாதச் சிறையும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவைத் தாண்டி அவர்கள் இப்போது அக்கருவிகளைப் பொருத்தினாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தைப் புரிவோரின் தண்டனைகள் இரட்டிப்பாகும். அதிகபட்ச அபராதத் தொகையாக 2026ஆம் ஆண்டு $10,000ஆக உயர்த்த திட்டமிடப்படுகிறது.
சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதால், அவ்வாறான கருவிகள் பொருத்தப்படாத லாரிகளின் சேவைகளைப் பயன்படுத்துவோர், காப்புறுதி சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கும் செய்வதற்கும் வழியில்லாமல் போகலாம்.
மேலும் அத்தகைய லாரிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் நிறுவனங்களின் பாதுகாப்பான செயல்பாட்டு (bizSAFE) உரிமங்களும் அவற்றைப் புதுப்பிக்கும்போது பாதிப்படையலாம்.
வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளால் பல நன்மைகள் உள்ளன. கனரக வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, சாலைகளில் போக்குவரத்து குற்றங்கள் குறைந்து, விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வேகமாக லாரி ஓட்டும் நிறுவனங்களுக்கு, பணியிடத்தில் பாதுகாப்பற்ற செயல்களைச் செய்ததற்காகப் போக்குவரத்துக் காவல்துறையால் ஒரு தீர்வு உத்தரவு வழங்கப்படும்.
பின்னர் நிறுவனங்கள் தங்களிடம் மீதமுள்ள அனைத்து லாரிகளிலும் அவற்றின் சட்டப்பூர்வ காலக்கெடுவிற்கு முன்னதாகவே வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தவேண்டும். இதன் தொடர்பான விதிமீறலுக்கு $50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
கனரக வாகனங்களுக்கான சட்டத் திருத்தங்கள் முதலில் 2023ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கடுமையான தண்டனைகள் சட்டத்தை மீறுவோர்மீது விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
அப்படியிருந்தும் காலக்கெடுவான டிசம்பர் மாதம் இறுதிவரையில் 400க்கும் மேற்பட்ட லாரிகள் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்தவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே போக்குவரத்துக் காவல்துறை குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், கடிதங்கள் என பல நினைவூட்டல்களை உரிமையாளர்களுக்கு அனுப்பிவந்துள்ளது. நேரடியாகவும் அவர்களை அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

