தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவிரவாதத்தின்பால் ஈர்க்கப்பட்ட இளையர் இருவர் மீது நடவடிக்கை: உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை

2 mins read
9647e715-f2b7-4e67-9311-bd82369015fd
மாருஃப் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் உடன் உள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்ட சிங்கப்பூர் இளையர் இருவர் மீது கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புதன்கிழமை (ஏப்ரல் 2) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டது.

15 வயதும் 17 வயதும் நிரம்பிய அந்த இளையர்களுக்கு முறையே கட்டுப்பாட்டு உத்தரவும் தடுப்புக்காவல் உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளன.

மாணவியான 15 வயதுப் பெண், ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஆதரித்தார். அந்த அமைப்பைச் சேர்ந்த போராளி ஒருவரைத் திருமணம் செய்ய ஆசைப்பட்ட அவர், சிரியாவுக்காக அந்தக் குழுவில் இணைந்துப் போரிடுவதற்குத் தயாராக இருந்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் பதின்ம வயதுப் பெண் அவர்.

மற்றொருவரான 17 வயது இளையர், தீவிர வலதுசாரி இனவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். சிங்கப்பூரிலுள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்த அவர் தயாரானதாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரின் ஐந்து பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தி, முஸ்லிம்கள் 100 பேரையாவது கொலை செய்துவிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

டிசம்பர் 2024ல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்ட மற்றொரு சிங்கப்பூரரான 18 வயது நிக் லீயிடம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரித்தபோது அந்த 17 வயது இளம் ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.

இஸ்லாம் மீது வெறுப்பைத் தூண்டும் தகவல்களையும் தீவிர வலது சாரி சித்தாந்தம் கொண்ட தகவல்களையும் 17 வயது ஆடவர் நிக் லீயுடன் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களிலுமே மாணவர்கள் தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டது கவலைக்குரியது என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாருஃப் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், வலதுசாரி சித்தாந்தத்தின்பால் இத்தகைய இளையர்கள் ஈர்க்கப்படும் போக்கு கவலைக்குரியது என்றார்.

மலாய், முஸ்லிம் சமூகம் இதுகுறித்துக் கவலைப்படவேண்டுமா என்ற கேள்விக்குத் திரு சண்முகம், “நாம் அனைவரும் கவலைப்படவேண்டும். ஏனெனில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால், அது முஸ்லிம் சமூகத்திற்குத் தீயது. ஒட்டுமொத்த சிங்கப்பூருக்கும் தீயது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே சமூகம்,” என்று பதிலளித்தார்.

உள்துறை அமைச்சுக்கான துணையமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராகிமும் அமைச்சர் சண்முகத்துடன் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்றார்.

தீவிரவாத சித்தாந்தத்தின்பால் ஒருவர் ஈர்ப்பு கொள்ளத் தொடங்கும்போது அவரது உற்றார் உறவினர் அது குறித்துத் தகவல் அளிக்கவேண்டும். சமூகத்தில் நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க அது அவசியம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்