தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவங்காடி நிலையத்தில் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம் திறப்பு

2 mins read
ee09c0db-3b34-4c0c-bafe-fc6a0bc0becb
தனிமையில் வாழும் முதியோரின் ஊட்டச்சத்துச் சவால்களை ஆராயும் ஆய்வு, என்டியுசி ஹெல்த்தின் ஏழு துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களில் நடத்தப்படுகிறது. அதுபற்றிக் கலந்துரையாடும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 2
Watch on YouTube

உணவங்காடி நிலையத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) காலை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது

சிங்கப்பூரின் 224வது துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையமான இந்நிலையம், புக்கிட் பாஞ்சாங் உணவங்காடி நிலையத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ளது.

இதுவே என்டியுசி ஹெல்த் இயக்கும் 25வது துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இயங்கிவரும் இந்நிலையம், இதுவரை 900 முதியோரை ஈர்த்துள்ளது. அவர்களில் 400 பேர் புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வசிக்காதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “‘எல்லைகளற்ற துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையம்’ எனும் நம் போக்குடன் இது ஒத்துப்போகிறது. புக்கிட் பாஞ்சாங் நிலையத்தில் மட்டுமன்றி தீவு முழுவதுமுள்ள 25 என்டியுசி ஹெல்த் நிலையங்களிலும் அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்,” என்றார் என்டியுசி ஹெல்த் தலைமை நிர்வாகி சான் சூ யீ.

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வசிக்கும் 4,500 முதியோரைச் சென்றடைவதே இந்நிலையத்தின் இலக்கு.

“நம் முதியோர் தம் நண்பர்களைச் சந்திப்பதற்காக அன்றாடம் உணவங்காடி நிலையத்திற்கு வருகின்றனர். அவர்கள் முதல் தளத்தில் காப்பி குடித்தபிறகு இரண்டாம் தளத்தில் இந்நிலையத்துக்கு வரலாம்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் அடித்தள ஆலோசகர் லியாங் எங் ஹுவா.

தாம் செல்லும் தொகுதிகளில் முதியோருக்கு ‘ஏஏசி’ எனப்படும் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்கள் பற்றித் தெரிவதாகப் பாராட்டினார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் யி காங்.

“துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களின் வெற்றி, நீங்கள் வெவ்வேறு சமூகப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதில்தான் உள்ளது. உங்கள் அடித்தள ஆலோசகருடனும் அருகிலுள்ள மருத்துவமனைகளுடனும் இணைந்து செயல்படுங்கள்,” என்று அமைச்சர் ஓங் கேட்டுக்கொண்டார்.

துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்தில் இந்தியர்களின் ஈடுபாடு

தன் உறவினரான 86 வயது கமலா கோவிந்தசாமியுடன் புதிய நிலையத்துக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் வருகிறார் திருவாட்டி நீலா செல்லையா, 76.

புக்கிட் பாஞ்சாங் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்துக்குத் தவறாமல் வரும் திருவாட்டி கமலா கோவிந்தசாமி, 86 (இடது), திருவாட்டி நீலா செல்லையா, 76.
புக்கிட் பாஞ்சாங் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையத்துக்குத் தவறாமல் வரும் திருவாட்டி கமலா கோவிந்தசாமி, 86 (இடது), திருவாட்டி நீலா செல்லையா, 76. - படம்: ரவி சிங்காரம்

“உடற்பயிற்சி, யோகா, விளையாட்டுகள் எனப் பலவித நடவடிக்கைகளிலும் கலந்துகொள்வோம். இங்குள்ளவர்கள் அன்பானவர்கள். எங்களை ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செந்தோசாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்,” என்றார் திருவாட்டி கமலா.

எனினும், நிலையத்துக்குக் குறைவான இந்தியர்கள் வருவதாகக் கூறி வருந்தினார் திருவாட்டி நீலா.

“சிலர் ஒருநாள் வருகிறார்கள், மற்றொரு நாள் வருவதில்லை. சிலர் அழைத்தாலும் வருவதில்லை. சிலருக்கு வீட்டில் அலுவல்கள் இருப்பதால் வர முடிவதில்லை,” என்றார் அவர்.

இந்நிலையம் தங்கள் வீட்டிற்கு அருகே அமைந்திருப்பதால் வருவதற்கு வசதியாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

தீவு முழுவதுமுள்ள 25 என்டியுசி ஹெல்த் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்களுக்குக் கிட்டத்தட்ட 500 இந்தியர்கள் வருகின்றனர்.

புகைப்படக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவர் நடக்கும் விதத்தை ஆராய்ந்து, அவர் கீழே விழுவதற்கான அபாயத்தை ஆராயும் புதிய மென்பொருளும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 
புகைப்படக் கருவிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவர் நடக்கும் விதத்தை ஆராய்ந்து, அவர் கீழே விழுவதற்கான அபாயத்தை ஆராயும் புதிய மென்பொருளும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.  - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்