ஏக்கர்ஸ் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றார் விலங்குநல ஆர்வலர் அன்பரசி

2 mins read
7926d0df-8e9b-4f51-9294-2c4a7843e559
வனவிலங்கு ஆர்வலரும் துணைத் தலைமை நிர்வாகியுமான அன்பரசி பூபாலன் ஏக்கர்ஸ் அமைப்பிருந்து ஓய்வுபெற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ஏக்­கர்ஸ்’ எனப்­படும் விலங்குநல ஆராய்ச்சி, கல்­விச் சங்­கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வனவிலங்குகளைப் பராமரித்து அவற்றுக்காக வாதாடிய திருவாட்டி அன்பரசி பூபாலன், பணியிலிருந்து ஓய்வெடுத்துள்ளார்.

43 வயது திருவாட்டி அன்பரசி ஏப்ரல் 30ஆம் தேதி ஏக்கர்ஸ் அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகினார்.

ஒருசில மாதங்களுக்கு ஓய்வெடுக்கவிருப்பதாகச் சொன்ன அவர், அடுத்த கட்ட நடவடிக்கையாக விலங்கு நலன் தொடர்பான கொள்கைகளில் கவனம் செலுத்தவிருக்கிறார்.

“இயற்கை எனக்கு அமைதி தருகிறது. அந்த இயற்கை அவதியுறும்போது என் அமைதி கெடுகிறது,” என்ற திருவாட்டி அன்பரசி, “விலங்குகள் வதைபடுவதை அநியாயமாகப் பார்க்கிறேன்,” என்றார்.

எந்தவொரு விலங்கும் சிறியதோ அவசியமற்றதோ அல்ல என்று நம்பும் திருவாட்டி அன்பரசி, பலரும் புகாரளிக்கும் மலைப்பாம்புகள், புறாக்கள் போன்றவற்றின் நலனுக்காகப் பேசியிருக்கிறார்.

சிங்கப்பூர் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முறியடிக்கும் முயற்சிகளிலும் திருவாட்டி அன்பரசி பங்களித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 51 இந்திய நட்சத்திர ஆமைகள் திருவாட்டி அன்பரசியின் கண்காணிப்பில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன.

2010ஆம் ஆண்டு நகைக்கடைகளில் சட்டவிரோதமாகப் புலியின் பாகங்கள் விற்கப்படுவதாகக் கூறப்பட்ட விவகாரத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் திருவாட்டி அன்பரசி.

2005ஆம் ஆண்டு ஏக்கர்ஸ் அமைப்பில் தமது பயணத்தைத் தொடங்கிய திருவாட்டி அன்பரசி, அப்போது தேசியப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நிர்வாகத் துறையில் முதுநிலைக் கல்வி பயின்றுகொண்டிருந்தார்.

அதையடுத்து 2007ஆம் ஆண்டு ஏக்கர்ஸ் அமைப்பில் முழுநேரமாகச் சேர்ந்தார் திருவாட்டி அன்பரசி.

சுங்கை தெங்காவில் சிங்கப்பூரின் முதல் வனவிலங்கு மீட்பு நிலையத்தை உருவாக்கிய குழுவில் திருவாட்டி அன்பரசியும் ஒருவர். 2009ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட ஏக்கர்ஸ் அமைப்பு காயமடைந்த அல்லது சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட விலங்குகளுக்குப் புகலிடமாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்