தெலுக் பிளாங்கா வட்டாரத்தில் பிறருக்குச் சொந்தமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கதவின் பூட்டைத் திறந்ததற்காக உள்ளூர் நடிகர் ரயன் லியான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 15ஆம் தேதியன்று புளோக் 93B தெலுக் பிளாங்கா ஸ்திரீட் 31ல் நிகழ்ந்தது.
தமது கணவர், பிள்ளையுடன் வெளியே உணவருந்திக்கொண்டிருந்தபோது இதுகுறித்து தெரியவந்ததாக அந்த வீட்டில் வசிப்பவரான 30 வயது தாதியரான லோரா தெரிவித்தார்.
“என் வீட்டுக்கு வெளியே உணர்கருவியும் கேமராவும் உள்ளன. விநியோக ஊழியர் ஒருவர் வீட்டுக்கு வந்திருக்கக்கூடும் என்று முதலில் எண்ணினேண். ஆனால் கேமரா பதிவுகளைப் பார்த்தபோது சட்டை அணியாத ஒருவர் என் கதவு அருகில் இருப்பதைப் பார்த்தேன். எனது மின்னிலக்கப் பூட்டை அவர் திறந்துவிட்டார்,” என்று லோரா கூறினார்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு அந்த ஆடவர் அப்பூட்டைப் பூட்ட முயன்றதாக லோரா தெரிவித்தார்.
அந்த ஆடவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றபோது தமது பணிப்பெண் வீடு திரும்பியதாக லோரா கூறினார்.
“அந்த ஆடவர் தமது வீட்டுக் கதவைத் திறக்க முயன்றது பற்றி எனது பணிப்பெண்ணுக்குத் தெரியாது. நல்ல வேளை, அந்த ஆடவரிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. அவர் யாரையும் காயப்படுத்தவில்லை,” என்றார் லோரா.
பூட்டைத் திறந்தவர் 39 வயது ரயன் லியான் எனப் பிறகு அடையாளம் காணப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர் உள்ளூர் திரைப்படங்களில் நடித்தவர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அண்டைவீட்டுக்காரர்களிடமும் லோரா இதுகுறித்து பகிர்ந்துகொண்டார்.
அதே மாடியில் உள்ள மற்ற வீடுகளின் கதவு மணியை லியான் ஒலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனநலச் சட்டத்தின்கீழ் லியான் கைது செய்யப்பட்டுள்ளார்.


