அடிமைத்தனமும் எதிர்மறைச் செய்தி தேடலும் இளையரைப் பாதிக்கும் முக்கிய சமூக ஊடகத் தீங்குகள்

அடிமைத்தனமும் எதிர்மறைச் செய்தி தேடலும் இளையரைப் பாதிக்கும் முக்கிய சமூக ஊடகத் தீங்குகள்

2 mins read
c162f5d6-ee1b-4393-ba2a-73588a880308
இணையவழி அச்சுறுத்தலும் தகாத உள்ளடக்கங்களும்  இளையரைப் பாதிக்கும் பிற அம்சங்கள் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக ஊடகப் பயன்பாட்டினால் இளையர்களுக்கு ஏற்படும் தீங்குகளில் அடிமைத்தனமும் எதிர்மறையான செய்திகளைத் தொடர்ச்சியாகத் தேடிப் படிக்கும் ‘டூம் ஸ்க்ரோலிங்’ பழக்கமுமே முதன்மையாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இவற்றுக்கு அடுத்தபடியாக, இணையவழி அச்சுறுத்தலும் தகாத உள்ளடக்கங்களும் உள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 14) வெளியிடப்பட்ட அந்த ஆய்வின் அறிக்கை குறிப்பிட்டது.

இளையர்களால் நடத்தப்படும் ‘யூத்டெக் எஸ்ஜி’ என்னும் அறநிறுவனம் அந்த ஆய்வறிக்கையை வெளியிட்டது.

இளையர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், என்ன மாதிரியான பாதிப்புகளை அவர்கள் சந்திக்கிறார்கள் என்பது குறித்த கருத்துகளை அந்த அமைப்பு திரட்டியது.

கலந்தாய்வுக் குழு விவாதங்கள், நேரடியாக மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் இணையவழி வாக்கெடுப்பு மூலம் கருத்துகள் திரட்டப்பட்டன.

13 முதல் 35 வயதுக்குட்பட்ட 227 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இளையர்கள் எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் நம்பகமானதாகவும் கருதுகிறார்கள் என்பதும் ஆராயப்பட்டது.

கலந்தாய்வு விவாதங்கள் மற்றும் நேரடி நேர்காணல்களில் 116 பேர் பங்கேற்றனர். அவர்களில் ஐவரில் ஒருவர், சமூக ஊடகங்களில் தாங்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான தீங்காக அடிமைத்தனத்தையும் ‘டூம் ஸ்க்ரோலிங்’ பழக்கத்தையுமே குறிப்பிட்டனர்.

அடுத்தபடியாக, இணையவழி அச்சுறுத்தல், நச்சுத்தன்மை வாய்ந்த, தகாத உள்ளடக்கங்கள் ஆகியவற்றை அவர்கள் கூறினர்.

இணையவழி வாக்கெடுப்பில் பங்கேற்ற 111 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர், வரம்பற்ற முறையில் பக்கங்களை நகர்த்தும் வசதி, பரிந்துரைகள் போன்ற சமூக ஊடகத் தளங்களின் வடிவமைப்புகளே தீங்கிற்கான முதன்மைக் காரணம் எனத் தெரிவித்தனர்.

பயனர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள், தேவையற்ற குறுஞ்செய்திகள் ஆகியவையும் பிற பொதுவான காரணங்களாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்