தளர்த்தப்பட்ட நிபந்தனைகளால் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ மாணவர் கைச்செலவு நிதித் திட்டத்தால் கூடுதலாக 1,000 மாணவர்கள் பயனடைவர்.
கல்வி அமைச்சின் நிதியாதரவுத் திட்டம், காம்கேர் உதவித்திட்டம் ஆகியவற்றிலிருந்து உதவி பெறும் மாணவர்கள், துணைப்பத்திரங்கள் ஏதுமின்றி இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று நிதித்திட்டத்தின் தலைவர் ஜேமி ஹோ தெரிவித்தார்.
அத்துடன், விண்ணப்பதாரர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக நாலறை வீட்டில் அல்லது அதைவிட சிறிய வீட்டில் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் அகற்றப்பட்டுள்ளதாக திரு ஹோ தெரிவித்தார்.
பயனாளர்களுக்கு 12 மாதங்கள் வரையிலான ஆதரவைப் பெற அவர்களது சார்பில் அமைப்புகள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்தத் தவணைக்காலம் தற்போதுள்ள ஆறு மாதங்களிலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதியன்று தோ பாயோவிலுள்ள எஸ்பிஎச் செய்தி மையத்தில் நடைபெற்ற வருடாந்தர மாணவர் கைச்செலவு நிதித் திட்டத்தின் பாராட்டு நண்பகல் உணவு விருந்து நிகழ்ச்சியில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
“இந்த மாற்றத்தால் கூடுதலாக 15 விழுக்காட்டு மாணவர்கள் எங்கள் நிதித்திட்டத்தில் சேர்க்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார். 2023ல் இந்த நிதித்திட்டம் சுமார் 8,000 மாணவர்களுக்குக் கைகொடுத்தது.
விருந்து நிகழ்ச்சியின்போது வர்த்தகரும் ‘எம்இஎஸ்’ குழுமத்தின் தலைமை நிர்வாகியுமான முகமது அப்துல் ஜலீல், 500,000 வெள்ளியை நன்கொடையாக அளித்தார்.
இந்தத் நிதித்திட்டத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு ஆகாத நிலையிலும் அதற்குள் தம் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை உணர்வதாக 15 வயது தனிஷா கணேசன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் செய்ய விரும்புவதை என்னால் மேலும் சுதந்திரமாகச் செய்ய முடிகிறது. அத்துடன், நான் விரும்பும் பொருள்களை என்னால் வாங்க முடிகிறது,” என்று கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை மூன்று மாணவியான தனிஷா கூறினார்.
ஒற்றைப்பெற்றோரான தம் தாயார் கொவிட்-19 கிருமிப்பரவலால் வேலை இழந்ததை அடுத்து தனிஷா, ஒரு நாளுக்கு 10 வெள்ளிக்குள் சாப்பாடு மற்றும் இதர பள்ளிச் செலவுகளை முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதனால் அவருக்குச் சேமிப்பதற்குப் போதிய பணம் இல்லை.
“உயர்நிலை 1 படித்துக்கொண்டிருந்தபோது எனக்கும் என் தாயாருக்கும் பண நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் வெளியே செல்ல என்னை அழைத்திருந்த நண்பர்களை மறுக்க வேண்டியிருந்தது. இது எனக்குக் கவலையை ஏற்படுத்தியது. செலவுப் பற்றிய கவலை எனக்கு அப்போது இருந்தது,” என்று அவர் கூறினார்.
இந்தக் காரணத்தால் கித்தார் இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொண்டிருந்த தனிஷா, அதனைக் கைவிட வேண்டியிருந்ததாகக் கூறினார்.
தனிஷா வருங்காலத்தில் கடல்துறை உயிரியல் வல்லுநராக அல்லது விலங்கு மருத்துவராக ஆசைப்படுகிறார். கைச்செலவு நிதி ஆதரவால் மாணவராகச் சுதந்திரத்துடன் வாழ முடிவது மட்டுமின்றி, தம் தாயாரின் நிதிச்சுமை குறைவதை எண்ணி நிம்மதி அடைவதாகவும் அவர் கூறினார்.

