கட்டடச் சூழல் ஆய்வு, புத்தாக்கத்திற்குக் கூடுதலாக $112 மில்லியன் ஒதுக்கீடு

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தகவல்:

கட்டடச் சூழல் ஆய்வு, புத்தாக்கத்திற்குக் கூடுதலாக $112 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
27f6bc96-12ad-40fb-a7f9-3ab8db3ae16f
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 2) ‘அனைத்துலகக் கட்டடச் சூழல் வாரம் 2026’ நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் பேசினார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கட்டடச் சூழலுக்கான ஆய்வு, புத்தாக்கப் பணிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய $112 மில்லியன் ஒதுக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை வர்த்தகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் அது உதவும் என்றார் அவர்.

‘ஆய்வு, புத்தாக்கம், நிறுவனம் 2030’ திட்டத்தின்கீழ் இந்த நிதி ஒதுக்கப்படும்.

கட்டடங்களை இடிப்பதற்குப் பாதுகாப்பான, அதிக உற்பத்தித் திறன் கொண்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்.

கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட $185 மில்லியன் கொடுக்கப்பட்டது. இப்போது கூடுதலாக நிதி வழங்கப்படுகிறது.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 2) ‘அனைத்துலகக் கட்டடச் சூழல் வாரம் 2026’ நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துத் திரு சீ பேசினார்.

“நமது நகரத்தின் அதிகப் பகுதிகளைப் புதுப்பிக்கும் வேளையில் நிறையக் கட்டடங்கள் உள்ள பகுதிகளில் ஆபத்துகள், இடையூறுகள், சத்தம் இவற்றோடு மற்ற சிரமங்களையும் குறைத்து, கட்டடங்களை இடிக்கும் பணிகளை மிகவும் திறம்படவும் பாதுகாப்பாகவும் செய்வதற்குச் சிறந்த வழிமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

கட்டடங்களைப் பராமரிக்கச் சிறந்த அதிநவீன வழிமுறைகளை உருவாக்குவதும் முக்கியம் என்றார் திரு சீ.

“நமது கட்டடங்கள் பழமையடையும்போதும் அவற்றின் பயன்பாடுகள் பல்வகைப்படும்போதும் கட்டடத்தின் உறுதித்தன்மை, வாழ்நாள் செலவு, எஞ்சியுள்ள செயல்பாட்டுக் காலம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்குச் சிறந்த கருவிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. இக்கருவிகள் கட்டட உரிமையாளர்கள் பராமரிப்புத் தேவைகளை முன்கூட்டியே கணித்து, சரியான நேரத்தில் பழுதுபார்ப்புகளைத் திட்டமிட உதவும்,” என்று அவர் தெரிவித்தார்.

“கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளும் முடுக்கிவிடப்படும். 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை அறவே அகற்றும் இலக்கை நோக்கிச் சிங்கப்பூர் செயல்படுகிறது,” என்றார் அமைச்சர் சீ.

இறுதியாக, நம்பிக்கையளிக்கும் புத்தாக்க முயற்சிகளை நடைமுறைத் தீர்வுகளாக மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பசுமைக் கட்டடச் சூழல்

பசுமையான முறையில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் சிங்கப்பூரின் முயற்சிகள் சீரான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக அமைச்சர் சொன்னார். நாட்டின் கரிம வெளியேற்றத்தில் கட்டடச் சூழல் துறையின் பங்கு 20 விழுக்காட்டுக்கும் அதிகம்.

சிங்கப்பூரின் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்குப் பசுமைக் கட்டடங்கள் மிகவும் முக்கியம். பசுமைக் கட்டடப் பெருந்திட்டம், சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030 ஆகியவற்றின்கீழ் 2030ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்கும் அவை அவசியம்.

சிறந்த பசுமைக் கட்டடங்களில் எரிசக்தியைத் திறம்பட்ட வகையில் பயன்படுத்துவதில் 2030க்குள் 80 விழுக்காட்டு மேம்பாட்டை எட்ட வேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்கு. தற்போது அது 72 விழுக்காடாய் இருப்பதாக அமைச்சர் சீ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்