தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வி அமைச்சின் நிதியுதவிக்கு மேலும் 31,000 மாணவர்கள் தகுதி

2 mins read
ef76a9c4-3cbf-4515-9ccb-2aec861b33cb
2026 கல்வியாண்டு முதல் ஏறத்தாழ 133,000 மாணவர்கள் தங்கள் பள்ளி சார்ந்த செலவுகளைச் சமாளிக்க நிதி உதவியைப் பெறுவார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வி அமைச்சு அதன் நிதியுதவித் திட்டத்தின் தகுதி வரம்புகளை மாற்றியுள்ளது. இதனால் மேலும் கிட்டத்தட்ட 31,000 மாணவர்கள் அமைச்சின் நிதியுதவித் திட்டத்திற்குத் தகுதிபெற்றுள்ளனர்.

இதன்மூலம் 2026 கல்வியாண்டு முதல் ஏறத்தாழ 133,000 மாணவர்கள் தங்கள் பள்ளி சார்ந்த செலவுகளைச் சமாளிக்க நிதி உதவியைப் பெறுவார்கள்.

இதற்கு முன்னர் கல்வி அமைச்சின் நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் குடும்பத்தின் மொத்த மாத வருமானம் 3,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அது 4,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் குடும்ப உறுப்பினர் ஒருவரது மாதம் வருமானம் 750 வெள்ளியிலிருந்து 1,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட வருமான வரம்புகள் மற்ற கல்வி அமைச்சின் உதவித் திட்டங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

எடுசேவ் சிறப்பு உதவித்தொகைக்கான (Edusave Merit Bursary) மாதக் குடும்ப வருமான வரம்பு 7,500 வெள்ளியிலிருந்து 9,000 வெள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை சிங்கப்பூர் மாணவர்களுக்கு வழங்கப்படும். படிப்பிலும் நன்நடத்தையிலும் சிறந்து விளங்கும் முதல் 25 விழுக்காடு மாணவர்கள் இதற்குத் தகுதி பெறுவார்கள்.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அப்லிஃப்ட் உதவித்தொகை (Uplift Scholarship) வழங்கப்படுகிறது.

அதற்கான குடும்ப மாத வருமான வரம்பு 4,400 வெள்ளியிலிருந்து 5,500 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பல ஆய்வுகளுக்குப் பிறகு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.

புதிய மாற்றங்களில் பெரும்பாலானவை வரும் நவம்பர் மாதத்தில் இருந்தே நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டில் உதவித்தொகைக்கான வருமான வரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

தற்போது மாற்றம் செய்யப்பட்ட உதவித்தொகைத் திட்டங்கள்மூலம் மாணவர்கள் அவர்களுக்கான போக்குவரத்துச் செலவுகளையும் சமாளிக்க முடியும்.

தொடக்கப் பள்ளி மாணவர்கள் அவர்களது மாதந்திரப் பள்ளிப் பேருந்துக் கட்டணத்தில் 70 விழுக்காடு வரை மானியம் பெறலாம். முன்னர் அது 65 விழுக்காடாக இருந்தது.

தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பொதுப் போக்குவரத்து மானியத் தொகை 21 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அது 17 வெள்ளியாக உள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி நிலையில் உள்ளவர்களுக்கான ஆண்டு நிதி உதவித் தொகை 1,600 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அது 1,200 வெள்ளி.

இதுபோன்ற பல உதவித்தொகைக்கான விவரங்களைக் கல்வி அமைச்சின் இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

“நிதிநிலைமைக் காரணங்களால் சிங்கப்பூர் மாணவர்கள் யாரும் கல்வியை கைவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது,” என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்